person passes away who came in bail near salem

ஓசூர் அருகே, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேடரப்பள்ளி ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 17) இரவு 10 மணியளவில், ஒருவர் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குவிரைந்தனர்.

Advertisment

சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்த நபர் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த அபி என்கிற அபிலேஷ் (28) என்பது தெரியவந்தது. அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

வேன் ஓட்டுநரான அபிலேஷ், கடந்த 2020ஆம் ஆண்டு பிப். 25ஆம் தேதி, பேடரப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரைக்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் அவர், கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்த பிறகும்கூட அவர் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். கடந்த மே 11ஆம் தேதி, ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (17) என்ற இளைஞரைக் கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஒருமாத சிறைவாசத்திற்குப் பிறகு, கடந்த 10ஆம் தேதி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில்தான் அபிலேஷ், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அபிலேஷால் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாராவது கூலிப்படையை வைத்து பழிக்குப் பழியாக அவரை வெட்டிக் கொலை செய்தனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

சடலம் கைப்பற்றப்பட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள், சம்பவம் நடந்த நாளில் அபிலேஷ் யார் யாரிடம் செல்ஃபோனில் பேசினார் உள்ளிட்ட விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்துவருகின்றனர். ஜாமீனில் வெளிவந்த கொலைக் கைதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.