/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4398.jpg)
தருமபுரி நரசியர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். கூலித் தொழிலாளியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஜெயவேல் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தார். இவரது மனைவி பழனியம்மாள் வீட்டு வேலை செய்து வருகிறார்.
ஜெயவேல், குடும்ப சூழ்நிலை காரணமாக தருமபுரியில் இயங்கி வரும் பெல் ஸ்டார் மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ. 80 ஆயிரம் கடனாகப்பெற்றுள்ளார். இந்தக் கடனை மாதம் 4,870 ரூபாய் வீதம் 24 மாத காலத்தில் தவணையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பெற்றுள்ளார். 20 மாதங்கள் கடனைத்திருப்பிச் செலுத்திய நிலையில், மீதம் 4 மாதக் கடனைத்திருப்பிச் செலுத்தாததால் கடந்த 3 மாதமாக மீதமுள்ள தவணைத்தொகையைக்கட்ட நிதி நிறுவன ஊழியர்கள் ஜெயவேலுவை வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை ஜெயவேலு வீட்டிற்கு 2 பெண்கள் உட்பட 5நிதி நிறுவன ஊழியர்கள் வந்தனர். அவர்கள், நான்கு மாத தவணைத்தொகையை வட்டியுடன் சேர்த்து 28 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். அதனை இன்றே செலுத்த வேண்டும் என கடும் வார்த்தைகளால் பேசி நெருக்கடியைக் கொடுத்துள்ளனர்.
கடனை நாளை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என ஜெயவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியும் கேட்காமல், தனியார் நிறுவன ஊழியர்கள் இன்றே மீதமுள்ள பணத்தைக் கட்டியே தீர வேண்டும் என நெருக்கடியைக் கொடுத்துள்ளனர். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயவேல், திடீரென வீட்டுக்குள் சென்று வீட்டில் இருந்த துணியால் மின்விசிறியில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4112.jpg)
இதனை அருகே இருந்தவர்கள் பார்த்துக் கூச்சலிட்டதால் அருகே இருந்தவர்களின் உதவியுடன் மின்விசிறியில் தொங்கிய ஜெயவேலுவை இறக்கியுள்ளனர். ஆனால் அதற்குள் ஜெயவேல் மரணமடைந்தார். உடனடியாக அருகே இருந்தவர்கள் அங்கிருந்த நிதி நிறுவன ஊழியர்களைமடக்கிப் பிடித்து நகர காவல்துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஐந்து பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட 2 பெண்கள் உட்பட 4 நிதி நிறுவன ஊழியர்களைக் காவல்துறையினரிடம் ஜெயவேலுவின் உறவினர்கள் ஒப்படைத்தனர். அதனையடுத்து நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)