person passes away in accident near tanjore

தஞ்சையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisment

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்தியா. ஐ.ஓ.பி. மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் கணேஷ். வங்கி ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் சுந்தர் கணேஷ் வீட்டிலேயே இருந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அரிவாளுடன் தப்பி சென்றார். பிறகு யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டிப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார். தப்பிச் செல்லும் போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் மோதியதில் கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அரிவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பந்தமாகவும் விபத்தில் உயிரிழந்தது சம்பந்தமாகவும் தஞ்சை நகர தெற்கு காவல் துறை, தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளனர். ஆனால், கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பால் டிப்போவில் இருந்த இருவரை ஏன் தாக்கினார் எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.