Person looted money from admk member

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (14/06/2022) காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த மாத இறுதியில் அதிமுகவின் பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில் அது குறித்தான விவகாரங்களை இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அதிமுக அலுவலகத்தில் வெளியே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் இரு தரப்பினர்களாக பிரிந்து ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும் மற்றொரு தரப்பு ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். அதிமுக செய்தித் தொடர்பாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேசியதாக தெரிவித்தார். இப்படி இன்றைய அதிமுக ஆலோசனைக் கூட்டம் பரபரப்பாக நடந்தது.

Advertisment

அதேசமயம், அதிமுக அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டத்திலும் ஒரு பரபரப்பு நிகழ்வு நடந்தது. ஆலோசனைக் கூட்டம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்தனர். இந்தக் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர், அயனாவரம் அதிமுக நிர்வாகியின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.10,000 பணத்தை திருடினார். ஆனால், அவர் பின்னாடி நின்றிருந்த மற்றொரு அதிமுக நிர்வாகி அதனை பார்த்து திருடிய நபரை கையும் களவுமாக பிடித்தார். அதன்பின் அவரிடமிருந்து அந்தப் பணத்தை மீட்டு அயனாவரம் நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பிடிபட்ட நபரை காவல்துறையினரிடம் அதிமுகவினர் ஒப்படைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.