Skip to main content

உரிமையாளரைக் கடத்தி சொத்து அபகரிப்பு முயற்சி; அரசியல் கட்சிப் பிரமுகர் உட்பட 4 பேர் கைது

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

person interest seize the property

 

சிதம்பரத்தில் வீட்டு உரிமையாளரை காரில் கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக முக்கியக் கட்சிப் பிரமுகர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

 

தஞ்சை மாவட்டம், வடக்கு மாங்குடியைச் சேர்ந்தவர் காஜாமைதீன் (52). சென்னையில் குடியிருந்து வருகிறார். இவர் சிதம்பரம் வடக்கு ரத வீதியில் வசித்து வரும் ஜமாலுதீன் என்பவருக்கு சொந்தமான வீட்டைக் கடந்த 2017-ம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் வீட்டை ஜமாலுதின் கட்டுப்பாட்டில் விட்டு வாடகையை வசூல் செய்யச் சொல்லிவிட்டு காஜாமைதீன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியா வந்த காஜாமைதீன், ஜமாலுதீனிடம் பாக்கி இருந்த வாடகைப் பணத்தையும், வீட்டையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் சென்னைக்குச் சென்று காஜாமைதீனிடம் பணம் தருவதாகவும் அந்த வீட்டைத் தனக்கு தருமாறும் கேட்டுள்ளார். ஆனால், காஜாமைதீன் மறுத்து விட்டார்.

 

person interest seize the property

 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜமாலுதீன், காஜாமைதீனை காரில் கடத்தி வந்து சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் ஒரு இடத்தில் அடைத்துள்ளார்.  இதனையடுத்து காஜாமைதீன் செல்போன் மூலம் தனது மனைவி மற்றும் நண்பர் குமாருக்கு, தான் கடத்தப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளார். இதன் பேரில், காஜாமைதீனின் நண்பர் குமார் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்குப் புகார் செய்தார். அதன் பேரில் சென்னை நீலாங்கரை காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். பின்னர் இந்த வழக்கு சிதம்பரம் நகர காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.


இது தொடர்பாக, சம்பவத்திற்குத் துணையாக இருந்த ஜமாலுதீன், முகமதுரபீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், விஜயபாஸ்கர், செந்தில், நடனம், நடராஜ், ரவீந்திரன், பாலச்சந்திரன் உள்பட 9 பேர் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இவர்களில் செல்லப்பன்(49), சிதம்பரம் கே.கே.சி பிள்ளை தெருவை சேர்ந்த ஜமாலுதீன்(49), சிதம்பரம் ஓமகுளம் விஜயபாஸ்கர்(38), சிதம்பரம் லால்புரம் ரவீந்திரன்(31) ஆகிய நான்கு பேரை சிதம்பரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் செல்லப்பனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்