/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4384.jpg)
ஜோலார்பேட்டை - ஈரோடு (06845) பயணிகள் ரயில் நேற்று காலை 6.40 மணிக்கு தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தொட்டம்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மொரப்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை அருண் குமார் என்பவர் இயக்கினார். மொரப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் ஒரு நபர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் அருண் குமார், உடனடியாக ரயிலை நிறுத்தினார். திடீரென ரயில் நின்றதும் சிக்னலுக்காக நின்றிருக்கும் என பயணிகள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ரயிலைவிடு இறங்கிய அருண்குமார் தண்டவாளத்தின் ஓரம் ரத்தவெள்ளத்தில் கிடந்த நபர் அருகே சென்று பார்த்தபோது அவருக்கு உயிர் இருந்ததை அறிந்தார். உடனடியாக ரயிலுக்கு சென்ற அவர் பயணிகளிடம், ‘ஒரு நபர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவரை தூக்க வாருங்கள்’ என கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் சில பயணிகள் உடனே ரயிலில் இருந்து இறங்கி அருண் குமாருடன் சென்று அடிபட்டு கிடந்த அந்தப் பயணியைத் தூக்கி ரயிலில் ஏற்றியுள்ளனர். பிறகு ரயில் மொரப்பூரை நோக்கி விரைந்தது.
மொரப்பூர் ரயில் நிலையம் வந்ததும், அருண்குமார் அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் வெங்கடாசலத்தை அழைத்து, தான் மீட்ட நபரை ஒப்படைத்தார். பிறகு அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அறிவுறுத்தினார். மொரப்பூரில் இருந்து ரயில் மீண்டும் புறப்பட்டது. ரயில்வே போலீஸ் வெங்கடாசலம், உடனடியாக அந்த நபரை அருகே இருந்த அரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிகழ்வு தொடர்பாக சேலம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. கோபண்ணாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. கோபண்ணா விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் கேரளா மாநிலம், எர்ணாகுளம், தெற்கு பணம்பில்லா நகரைச் சேர்ந்த சதீஷ் (30) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சதீஷின் மனைவி சென்னையும், சதீஷ் கேரளாவிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சதீஷ் சென்னையில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்கு வேலையில் விடுப்பு எடுத்துகொண்டு சென்னை நோக்கி ஒரு ரயிலில் வந்துள்ளார். அப்போது அவர் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்துள்ளார். மொரப்பூர் அருகேரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அதே வழிதடத்தில், ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயிலை இயக்கி வந்துகொண்டிருந்த அருண்குமார் இவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தி அவரை காப்பாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் ரயில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சதீஷை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் அருண்குமார் மற்றும் அவருக்கு உதவிய பயணிகளை ரயில்வே போலீஸாரும், பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)