
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராக பாத்திமா சகாயராஜ் என்பவர் பணியாற்றிவருகிறார். இந்த நிலவரி அலுவலகத்திற்கு, எடத்தெரு பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் சென்று, ஒரு சர்வே எண்ணைக் கூறி, அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் தனி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜுக்கும் - கோபிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நில அளவை ஆய்வாளர் குணசேகர், மணப்பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் கோபி மீது மணப்பாறை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் வட்டாட்சியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பணியாளர்கள் அனைவரும் பணியைப் புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலக வாயிலில் நின்று போராட்டம் நடத்தியதுடன், பணியைப் பாதியிலேயே முடித்துவிட்டு அலுவலகத்தையும் பூட்டிவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் கோபி, தனி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் தன்னை தாக்கியதாகக் கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கோபியை கைது செய்ய தனியார் மருத்துவமனைக்கு காவல்துறையினர் விரைந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்ததால், கைது செய்யாமல் இருந்தனர். பின் இன்று (04.09.2021) காலை சிகிச்சை முடிந்தபிறகு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.