Person arrested under goondas in third time

சேலத்தில் அடிதடி, வழிப்பறி குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ரவுடியை மூன்றாவது முறையாக காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisment

சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்த சின்னதம்பி மகன் விஜி என்கிற விஜய் (36). ரவுடியான இவர், லைன் மேடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் டிசம்பர்6 ஆம் தேதி தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்துகத்தி முனையில் 2.50 பவுன் சங்கிலி, 4300 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இச்சம்பவம் தொடர்பாக அவரை அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில், இவர் மீது கடந்த 2021, 2022 பிப்ரவரியில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, சேலம் பள்ளப்பட்டி காவல்நிலையங்களிலும் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பிறகு மீண்டும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதோடு, அச்சுறுத்தலாகவும் செயல்பட்டு வரும் விஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர், துணை ஆணையர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

Advertisment

பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, விஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜியிடம் கைது ஆணை வழங்கப்பட்டது. இவர், மூன்றாவது முறையாக குண்டாசில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.