/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_40.jpg)
அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மேலும் ஒரு மாவோயிஸ்ட் ஆதரவாளரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கணவாய் புதூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்ட் போராளி. கடந்த 2019ம் ஆண்டு கேரள வனப்பகுதியில் வைத்து அம்மாநில அதிரடிப்படை காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குடும்பத்தினர் அவருடைய உடலைப் பெற்று வந்து சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்தனர். அப்போது, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சிலர், ‘ஆயுதம் ஏந்துவோம்; ரத்த கடனை ரத்தத்தால் பழி தீர்ப்போம்’ என்பன போன்றஅரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக கணவாய் புதூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் அளித்தப் புகாரின்பேரில், தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி, மைத்துநர் சாலிவானன், மதுரையைச் சேர்ந்த விவேக், காடையாம்பட்டி சுதாகர் ஆகிய 6 பேரை உடனடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் பத்து பேர் தலைமறைவானார்கள். இவர்களில் கடந்த வாரம் சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த செல்வராஜ் (55), ஓமலூர் ஆணைக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த பாலன் (41), சேலம் செல்வ நகரைச் சேர்ந்த சீனிவாசன் (66) ஆகிய 3 பேர் திடீரென்று கைது செய்யப்பட்டனர்.
மேலும், தலைமறைவாக இருந்த 7 பேரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், திங்களன்று (பிப். 15) காலை, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மாவோ ஆதரவாளரான தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த சித்தானந்தம் (57) என்பவரைகைது செய்தனர்.
பிடிபட்ட நபரிடம் டிஎஸ்பி சோமசுந்தரம் தீவிர விசாரணை நடத்தினார். கடந்த ஓராண்டாக எங்கெங்கு தலைமறைவாக இருந்தார்?, அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? அவருடன் தொடர்பில் இருந்த இதர மாவோயிஸ்ட்கள் யார்? என்பனஉள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் இன்னும் தலைமறைவாக உள்ள 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)