Person arrested in erode woman case

Advertisment

சேலம் மாவட்டம், பனைமரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி 30 வயது ரேகா. இவர்களுக்கு 4 வயது, மற்றும் 2 வயது என இரண்டு மகன்கள் உள்ளனர்.ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. ரோட்டில் ரேகாவின் தாய் தமிழரசியின் வீடு உள்ளது. அங்கு தமிழரசியும், அவரது மகன் ஜோதிமணியும் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்ற 24ஆம் தேதி ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக,ரேகா தனது இரண்டு மகன்களுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். 25ஆம் தேதி காலை கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு,மீண்டும் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ரேகாவின்தம்பி ஜோதிமணி வேலைக்குச் சென்றுவிட்டார். தாய் தமிழரசி ரோகாவின் மூத்த மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். வீட்டில் ரேகா தனது இளைய மகனுடன் இருந்துள்ளார்.

25ஆம் தேதி திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் ரேகா வீடு உள்ள பகுதிக்கு ஒரு இளைஞர் வந்துஅந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் ரேகாவின் வீடு எங்கு உள்ளது என்று விசாரித்துள்ளார். அவர்களும் ரேகாவின் வீட்டை காண்பித்துள்ளனர். அதன்பின் அந்த இளைஞன் ரேகா வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் வேகவேகமாக வெளியே வந்தார். அவரது உடையில் ரத்தக்கறை படிந்து இருப்பதைக் கண்டுஅக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை விசாரிக்க முயன்றபோது அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இதையடுத்து பொதுமக்கள், ரேகாவின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரேகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் பரவியதும் அவரது வீட்டு முன்பு அப்பகுதி மக்கள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்தனர். அதில் வாலிபர் ஒருவர்ரேகா வீட்டுக்குள் செல்வதும், பின்னர் சிறிது நேரத்தில் அவசர அவசரமாக அவர் வெளியேறுவதும் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டவுன் டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் ரேகாவை கொலைசெய்த அந்த வாலிபரை ஈரோட்டில் வளைத்துப் பிடித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறும்போது, "ரேகா கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நன்கு அறிமுகமான நபரே கொலை செய்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகித்தோம். சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை அடிப்படையாக வைத்தும், தீவிர விசாரணை நடத்தியும் துப்பு துலக்கினோம்.

Advertisment

இதில் ரேகாவை கொலை செய்தவரின்அடையாளம் தெரிந்தது. ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற பெயிண்டர்தான் ரேகாவைக் கொலை செய்துள்ளார். செந்தில்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கொலை செய்யப்பட்ட ரேகாவும், செந்தில்குமாரும் சில வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் ஒன்றாக வேலைபார்த்து வந்துள்ளனர். இதில் அவர்களுக்கிடையே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் செந்தில்குமார்தான் ரேகா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ரேகா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை செந்தில்குமார் பறித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ரேகாவிடம் இருந்து திருடிய நகையை செந்தில்குமார் ஒரு அடகு கடையில் அடமானம் வைத்துள்ளார். அந்த நகையை நாங்கள் மீட்டுள்ளோம். நகை தொடர்பாகத்தான் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு என்ன காரணம் என நாங்கள்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இன்னும் விசாரணை முழுமையாக முடியவில்லை. விசாரணை முடிந்த பிறகுதான்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்றார்.