Person arrested by kallakurichi police

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் 69 வயது ஆசீர்வாதம். விவசாயியான இவருக்கு 62 வயது மரியாள் என்ற மனைவியும், 46 வயதில் அந்தோணிராஜ், 36 வயதில் ஜான் ஜோசப் என்ற இரு மகன்களும் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ஆசீர்வாதம் தனது சொத்துக்களை முறைப்படி அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். அதில், ஆசீர்வாதம் தமது பெயரில் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அந்த நிலத்தை தன் பெயருக்கு எழுதி வைக்கும்படி அவரது இளைய மகன் ஜான் ஜோசப் தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தந்தை ஆசீர்வாதத்திடம் சொத்தை எழுதித் தருமாறு கேட்டு, ஜான் ஜோசப் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆசீர்வாதம், தன் பெயரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை எழுதித்தர முடியாது என மறுத்துள்ளார்.

Advertisment

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு தந்தை, மகன் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஜான் சோசப், உருட்டுக்கட்டையால் ஆசீர்வாதத்தைச் சரமாரியாகத்தாக்கி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த ஆசீர்வாதத்தின் மூத்தமகன் அந்தோணிராஜ், சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அதன்பிறகு, தந்தையைக் கொலை செய்த ஜான் ஜோசப்பை கைது செய்தனர். இதில் ஜான் ஜோசப்புக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது, ஜான் ஜோசப் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.