
மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் என்ற கிராமத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு, விசிக சார்பில் அக்கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. சுமார் 25 அடி உயரம் கொண்ட இந்த கொடிக்கம்பத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கொடியை ஏற்றி வைத்தார். இத்தகைய சூழலில் தான் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த கொடிக் கம்பம் 45 அடி உயரமாக மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இந்த புதிய கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றுவதற்கான நிகழ்ச்சி இன்று (08.12.2024) திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கொடிக் கம்பத்திற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்திற்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போது 45 அடி உயரமாக வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்திற்கு அனுமதி இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து விசிக தொண்டர்கள் நேற்று (07.12.2024) இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் 45 அடியாக உயர்த்தப்பட்ட விசிக கொடிக் கம்பத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் 20 அடிக்கு மேல் உள்ள கொடிக் கம்பங்களுக்குச் சென்னையில் உள்ள அதிகாரிகள் தான் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.