
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை பரிகார மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டது. கரோனா பரிசோதனைக்குப் பிறகே பக்தர்கள் பரிகார மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது பவானி கூடுதுறை. பவானி மற்றும் காவிரி என இரு ஆறுகளும் ஒன்றாக இணைந்து கூடுவதால் இது கூடுதுறை என அழைக்கப்படுகிறது. முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிலர் காசிக்குச் செல்வார்கள். இந்தக் கூடுதுறை தென் நாட்டின் காசியாக பக்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இங்கு ஆற்றங்கரையோரம் உள்ள பரிகார மண்டபத்தில் அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எனப் பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்து தங்களது முன்னோர்களுக்குப் பரிகார பூஜைகள் செய்வார்கள்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பக்தர்களுக்குப் பரிகாரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் புரோகிதர்கள் பல்வேறு இடங்களில் பரிகார பூஜைகள் செய்துவந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, கோயில்களில் பூஜை மற்றும் காவிரி கரையோர பகுதியில் பரிகாரங்கள் செய்துகொள்ளலாம் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பவானி கூடுதுறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிகார மண்டபத்திற்குள் பரிகாரங்கள் செய்ய ஒரு குடும்பத்தாருக்கு மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலுக்கு வருபவர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என்றும் அதேபோல் பரிகாரம் செய்யும் புரோகிதர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் காவிரி ஆற்றில் குளிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்ததால், வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் காவிரியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.