'Permission to KAL ; Sale of Liquor on Ration '- Court order to consider

Advertisment

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதிக்க கோரும் விண்ணப்பத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக் கடைகளில் ஊழல் நிலவுவதாகவும், ஒரு மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக பணம் பெற்று விற்கப்படுவதாகவும், இதனால் கிடைக்கும் பணத்தை டாஸ்மாக் கடையின் விற்பனையாளர், மேலாளர் முதல், அமைச்சர் வரை பகிர்ந்து கொள்வதாகவும் சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் 'மது பாட்டில்களில் அச்சடிக்கப்பட்டுள்ள விலையை விடக் கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டாம்' என டாஸ்மாக் கடைகளில் பலகை வைக்க வேண்டும்; கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது' என விளக்கம் அளிக்கும்படி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கிருஷ்ணகுமார் கே. குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 'கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு; இது தொடர்பாக இரண்டு நீதிபதிகளில் அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறது' என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisment

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்; சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதிகோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்தஉத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் ஊழல்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான மனுவை பதிலாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு,இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 8 வார காலத்திற்குஒத்திவைத்தனர்.