Skip to main content

“அகழாய்வுக்கு தொய்வின்றி அனுமதியும், நிதியும் வழங்க வேண்டும்” - கே. பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

"Permission and funding for excavation should be given without delay" - K. Balakrishnan

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன். பின்னர் புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அகழாய்வு செய்யப்படும் சங்ககால கோட்டைப் பகுதியான பொற்பனைக்கோட்டைக்கு மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் பொற்பனைக்கோட்டை நீர்வாவிக்குளத்தில் முதன்முதலில் கி.பி. 2ஆம் நூற்றாண்டு கல்வெட்டைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்திய புதுகை பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் சங்கர், டைஃபி நகரத் தலைவர் விக்கி, தமுஎகச மாவட்டச் செயலாளர் சு. மதியழகன் ஆகியோருடன் அகழாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.

 

அகழாய்வு இயக்குநர் முனைவர் இனியன் உட்பட அகழாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்ளிடம் பேசும்போது, “பொற்பனைக்கோட்டையில் சங்ககால மக்கள் பயன்படுத்திய செங்கல், பானை ஓடுகள் கிடைத்துள்ளது. கீழடியில் அகழாய்வில் கிடைத்துள்ள சான்றுகள் சிந்துசமவெளி நாகரிகத்தோடு ஒத்துப்போகிறது.  ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்பட பல இடங்களில் இந்திய, தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு செய்து பண்டைய தமிழர்களின் வாழ்க்கை நாகரிகத்தை வெளிக்கொண்டுவருகிறது. அதேபோல பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்குத் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் பார்த்தசாரதி, துறைத்தலைவர் தனலெட்சுமியின் முழு ஒத்துழைப்போடு முனைவர் இனியனை இயக்குநராகக் கொண்டு முதன்முறையாக அகழாய்வு பணியை தொடங்கியுள்ளது.

 

"Permission and funding for excavation should be given without delay" - K. Balakrishnan

 

இதற்காக ரூ. 1 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் சிறிய அளவில் அகழாய்வு பணிகள் நடக்கிறது. இந்த நிதி போதுமானது இல்லை. அதனால் கூடுதல் நிதி வழங்க வேண்டும். மேலும், தொடர்ந்து அகழாய்வு பணிகள் தொய்வின்றி நடப்பதற்கு உடனடியாக கூடுதல் கால நீட்டிப்பும் செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் சங்ககால மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரத்தை வெளிக்கொண்டுவர முடியும். இதற்காக இந்திய, தமிழக தொல்லியல் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொற்பனைக் கோட்டை அகழாய்வில் அரண்மனை கழிவு நீர் வாய்க்கால் கண்டுபிடிப்பு?

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

Palace construction discovery in Porpanaikottai excavation?

 

சங்க கால கோட்டையான பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், தினசரி ஏராளமானோர் அகழாய்வு இடத்தை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், பொற்பனைக் கோட்டை அகழாய்வு தளத்தினை சனிக்கிழமை திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்தவர்களும், சாரணர் இயக்கத்தினை சேர்ந்த மாணவர்களும் காண வந்தனர். பார்க்க வந்த மாணவர்களுக்கு பொற்பனைக் கோட்டை அகழாய்வு இயக்குநர் தங்கதுரை, அகழாய்வின் முக்கியத்துவம், பொற்பனைக் கோட்டை அகழாய்வு குறித்தும் விளக்கம் அளித்தார்.

 

தொல்பொருட்களை பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தினை சேர்ந்த மாணவர்கள் அகழாய்வு குறித்து  பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர். இதில் ஆசிரியர் சித்திரலேகா மற்றும் சாரணர் இயக்கத்தின் மாஸ்டர்  அன்பழகன் மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். 

 

Palace construction discovery in Porpanaikottai excavation?

 

ஒவ்வொரு அகழாய்வுக் குழிகளிலும் கிடைத்த தொல்பொருட்களை பற்றி ஆய்வு மாணவர்களான சுதாகர், முனுசாமி, பாரத் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள். நிகழ்வின் முடிவில் ஆசிரியர், சாரணர் இயக்கத்தின் மாஸ்டர் மற்றும் பள்ளி மாணவர்கள் இங்கு பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

 

மேலும், கடந்த வாரம் வட்டச்சுவர் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து நடந்த அகழாய்வில் வட்டச் சுவரை ஒட்டிய பகுதியில் பயன்படுத்தப்பட்ட கழிவு நீர் செல்லும் வாய்க்கால் அடுத்தடுத்த குழிகளில் காணப்பட்டுள்ளது. அதனால் இது சிதைந்த அரண்மனை கட்டுமானத்தின் அடிப்பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு குழியில் சுமார் 10 அடி ஆழத்தில் ஒரு பானை கிடைத்துள்ளது. மேலும் சுமார் 15 அடி ஆழம் வரை தோண்டிய நிலையில் கிடைத்துள்ள பானை ஓடுகள் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வாழ்விடமாக இருந்ததற்கு சான்றாக உள்ளது. அதாவது இந்தப்பகுதியில் சங்ககாலம் முதல் வரலாற்றுக்காலம் என கி.பி 16, 17ம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. மேலும் அகழாய்வில் பல சான்றுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மூக்குத்தி, தோடு

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

தமிழக அரசு தொல்லியல்துறை பொற்பனைக்கோட்டையில் தொலைநிலை உணர்திறன் முறையான கண்டறிதல் மற்றும் வரம்பு (LIDAR) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்ததைக் கண்டறிந்து தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அகழாய்வு பணியினை மே மாதம் 20 ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள்.

 

பொற்பனைக்கோட்டை அகழாய்வானது 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை திடல் வாழ்விட பகுதியில் இதுவரை 5 மீட்டர் நீள அகலத்தில் 8 குழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. சுந்தரராஜன் என்பவர் நிலத்தில்  4 குழிகளும் மாரிமுத்து, கருப்பையா, பழனியப்பன், ரங்கசாமி ஆகியோரின் நிலத்தில் தலா 1 குழிகளும் தோண்டப்பட்டு வருகிறது. அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையில் ஆய்வு மாணவர்கள் சுதாகர், முனுசாமி, பாரத் ஆகியோருடன் அகழாய்வு பணிகளானது நடைபெற்று வருகிறது அகழாய்வு பணிக்கு 35 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே A1 எனும் குழியில் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.  இதுவரை வட்டச்சில்லுகள் (Hopscotch)-  49, கென்டி மூக்குகள்(Spout)- 2, கண்ணாடி வளையல்கள்(Glass Bangle)- 4, கண்ணாடி மணிகள் (Beads)- 95, சுடுமண் விளக்கு (TC Lamp)- 1, தக்களிகள்  (spindle whorl)- 2, காசு (Coin)- 1, சூதுபவளமணி (carnelian Bead)- 1 மெருகேற்றும் கற்கள் (rubbing Stone)- 2 என 159 தொல்பொருட்களும், கீறல் குறியீடு (Graffiti )2ம்  கிடைத்துள்ளது.

 

மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை ஓடுகள் (Glazed Ware), கருப்பு நிற பானை ஓடுகள் (Black Ware ), கருப்பு- சிவப்பு நிற பானை ஓடுகள் (Black and Red Ware), மேற்கூரை ஓடுகள் (roof tile), துளையிடப்பட்ட பானை ஓடுகள் (perforated Ware)-2 என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளது.அதை தொடர்ந்து பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்து வரும் நிலையில் இன்று பொற்பனைக்கோட்டை அகழாய்வில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

H2 எனும் குழியில் 133.cm ஆழத்தில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி / தோடு Nose Stud / ear studs ஒன்றும், B1 எனும் குழியில் 140.cm முதல் 145.cm ஆழத்தில் எலும்பு முனை கருவி (Bone point) மற்றும் வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய  150.cm முதல்160.cm ஆழத்தில் கார்னீலியன் (carnelian bead)  பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது. 

 

எலும்பு முனை கருவி நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்ககூடியவை. தற்போது இங்கு கிடைத்துள்ள வட்ட வடிவிலான சூதுபவள மணியானது கார்னீலியன் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் சூதுபவள மணியானது வரலாற்று தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆறு இதழ் கொண்ட 0.26 கிராம் எடையுடைய தண்டு உடைந்த தங்க மூக்குத்தி / தோடு கிடைத்திருப்பது சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

 

மேலும் அகழாய்வுக் குழிகள் ஆழப்படுத்தும் போது ஏராளமான தொல் பொருட்கள் கிடைப்பதுடன் பண்டை தமிழர்களின் நாகரீகம் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது.