ADVERTISEMENT

ஆர்.டி.ஐ-யில் தகவல் வழங்க நிரந்தர பணியாளர்கள்! மாநில ஆணையர் தகவல்! 

10:05 AM May 31, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் மனுதாரர்களுக்கு பதில் அளிக்க, ஒவ்வொரு துறையிலும் அதற்கென நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாக மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கூறினார்.


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மனுக்களின் மீதான விசாரணை திங்கள்கிழமை (மே 30) நடந்தது. அப்போது, மாநிலத் தகவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு துறைகளில் இருந்து பல்வேறு பொதுத்தகவல் அலுவலர்கள், மனுதாரர்கள் இந்த விசாரணையில் கலந்து கொண்டனர். பெரும்பாலான இரண்டாம் மேல்முறையீடு மனுக்கள் இன்று (30ம் தேதி) முடித்து வைக்கப்பட்டுள்ளது.


பொதுத்தகவல் அலுவலர்கள், மனுதாரர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு வருவதற்கு சிரமமாக உள்ளதால், தலைமை ஆணையர் உள்ளிட்ட ஆணையர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறோம். தினமும் சராசரியாக 300 முதல் 500 மனுக்கள் தமிழ்நாடு ஆணையத்திற்கு வருகின்றன. இந்த புகார்கள் மீது, மனுதாரர் மனு வழங்கிய நாளில் இருந்து 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். முதல் மேல்முறையீடு என்பது அதன்பிறகு 30 நாள்களில் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு புகார் வந்ததில் இருந்து 60 நாள்களுக்குள் முடித்து வைத்துவிடுவோம்.


சென்னையில் உள்ள ஆவணக் காப்பகத்தில் ஆவணங்கள் கோரி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் மனு அளிக்கின்றனர். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு உண்டான சில ஆவணங்களை சரியாக வழங்க முடியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர், கேள்விகளைக் கேட்கும்போது தெளிவாகக் கேட்க வேண்டும். ஒரே மனுவில் ஐந்து துறைகளுக்கான கேள்விகளை கேட்பதால் தெளிவான பதில்களை வழங்குவதில் சிரமம் உள்ளது. துறை சார்ந்த கேள்விகளை தனித்தனியாக கேட்கும்போது விரைவாக பதில் அளிக்க முடியும்.

அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகளின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கென பொதுத்தகவல் அலுவலர்கள் உள்ளனர். அவர்கள் தகவல் அளிக்கும் பணிகளை கூடுதலாக கவனிப்பதால், தொடர்புடைய துறை சார்ந்த பணிகள் தொய்வடைகிறது. இதற்கு நிரந்தரப் பொதுத்தகவல் அலுவலர்களை பணியமர்த்த அரசிடம் கோரப்பட்டுள்ளது.


நியாயமான தகவல்களைப் பெறுவதற்கு, மாநில தகவல் ஆணையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர்.டி.ஐ சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களுக்கு முறையான தகவல் கிடைக்கும் வகையில் தன்னார்வலர்கள், தகவல் அறியும் சட்டத்திற்கும், ஆணையத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT