Skip to main content

ஆர்.டி.ஐ-யில் தகவல் வழங்க நிரந்தர பணியாளர்கள்! மாநில ஆணையர் தகவல்! 

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

Permanent staff to provide information on RTI! State Commissioner Information!

 

ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் மனுதாரர்களுக்கு பதில் அளிக்க, ஒவ்வொரு துறையிலும் அதற்கென நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாக மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கூறினார்.


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மனுக்களின் மீதான விசாரணை திங்கள்கிழமை (மே 30) நடந்தது. அப்போது, மாநிலத் தகவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு துறைகளில் இருந்து பல்வேறு பொதுத்தகவல் அலுவலர்கள், மனுதாரர்கள் இந்த விசாரணையில் கலந்து கொண்டனர். பெரும்பாலான இரண்டாம் மேல்முறையீடு மனுக்கள்  இன்று (30ம் தேதி) முடித்து வைக்கப்பட்டுள்ளது. 


பொதுத்தகவல் அலுவலர்கள், மனுதாரர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு வருவதற்கு சிரமமாக உள்ளதால், தலைமை ஆணையர் உள்ளிட்ட ஆணையர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறோம். தினமும் சராசரியாக 300 முதல் 500 மனுக்கள் தமிழ்நாடு ஆணையத்திற்கு வருகின்றன. இந்த புகார்கள் மீது, மனுதாரர் மனு வழங்கிய நாளில் இருந்து 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். முதல் மேல்முறையீடு என்பது அதன்பிறகு 30 நாள்களில் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு புகார் வந்ததில் இருந்து 60 நாள்களுக்குள் முடித்து வைத்துவிடுவோம். 


சென்னையில் உள்ள ஆவணக் காப்பகத்தில் ஆவணங்கள் கோரி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் மனு அளிக்கின்றனர். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு உண்டான சில ஆவணங்களை சரியாக வழங்க முடியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர், கேள்விகளைக் கேட்கும்போது தெளிவாகக் கேட்க வேண்டும். ஒரே மனுவில் ஐந்து துறைகளுக்கான கேள்விகளை கேட்பதால் தெளிவான பதில்களை வழங்குவதில் சிரமம் உள்ளது. துறை சார்ந்த கேள்விகளை தனித்தனியாக கேட்கும்போது விரைவாக பதில் அளிக்க முடியும். 

 

அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகளின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கென பொதுத்தகவல் அலுவலர்கள் உள்ளனர். அவர்கள் தகவல் அளிக்கும் பணிகளை கூடுதலாக கவனிப்பதால், தொடர்புடைய துறை சார்ந்த பணிகள் தொய்வடைகிறது. இதற்கு நிரந்தரப் பொதுத்தகவல் அலுவலர்களை பணியமர்த்த அரசிடம் கோரப்பட்டுள்ளது. 


நியாயமான தகவல்களைப் பெறுவதற்கு, மாநில தகவல் ஆணையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர்.டி.ஐ சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களுக்கு முறையான தகவல் கிடைக்கும் வகையில் தன்னார்வலர்கள், தகவல் அறியும் சட்டத்திற்கும், ஆணையத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் கல்வி சான்றிதழை கேட்ட முதல்வர் கெஜ்ரிவால்; அபராதம் விதித்த நீதிமன்றம்!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

arvind kejriwal rti request for modi educational certificate issue 

 

மோடியின் படிப்பு சான்றிதழை பிரதமர் அலுவலகம் வழங்கத் தேவையில்லை என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ்கள் தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1978 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பும் படித்தார் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் 1978-ம் ஆண்டு மற்றும் 1983 ஆம் ஆண்டு படித்த அனைத்து மாணவர்கள் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்தார்.

 

கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்த விவரங்களை வழங்கலாம் என மத்திய தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்நிலையில், இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இன்று வெளியான தீர்ப்பில், மோடியின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் பொது தகவல் அதிகாரிகள் வழங்குமாறு உத்தரவிட்ட மத்திய தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவை நீதிபதி பீரன் வைஷ்ணவ் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் சான்றிதழ் பற்றிய விவரங்களைக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

அலட்சியத்தால் 426 அரசு வாகனங்கள் பழுதாகி மக்கும் அவலம்- ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்

Published on 09/10/2022 | Edited on 09/10/2022


புதுச்சேரி அரசு துறைகளில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் முறையாக பராமரிக்காததால் பழுதாகி, பயனற்று அந்தந்த துறை வளாகத்திலும் ஆண்டு கணக்கில் பலவாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி காவல்துறையில் 189 வாகனங்கள், வேளாண்துறையில் 188 வாகனங்கள், பாசிக்கில் 47 வாகனங்கள், தீயணைப்புத்துறையில் 6 வாகனங்கள் என இந்த 4 துறைகளில் மட்டும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 426 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

பொதுவாக ஒரு வாகனம் சிறிது பழுதாகும் போது அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதின் விளைவுதான் 426 வாகனங்கள் பழுதாகி, பயனற்றுவிட்டது. இந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என தெரியவந்த பிறகு இந்த வாகனங்களை உரிய காலத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்காததால் பல கோடி மதிப்புள்ள அரசு வாகனங்கள் மக்கி மண்ணாகி அரசு நிதி  வீணடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இவர்கள் புதியதாக சொகுசு கார்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதுபோல், வாகனங்களை உரிய நேரத்தில் பழுதுநீக்க நடவடிக்கை எடுத்திருந்தால் பல வாகனங்கள் பயன்பாட்டிலேயே இருந்திருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள  துறைகள் தவிர்த்து, பொதுப்பணித்துறை, நலவழித்துறை, மின்துறைகள் உட்பட புதுச்சேரியில் உள்ள சுமார் 46 துறைகளிலும் இதுபோன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கணக்கெடுத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும்.

 

இதுதொடர்பாக தகவல்பெறும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களை சமூக ஆர்வலர் ரகுபதி பெற்றுள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு துணைநிலை ஆளுநருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் அவர் மனு அளித்துள்ளார். அதில், 'புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் இதுபோன்று பயனற்று, பழுதாகி உள்ள வாகனங்களை உரிய காலத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைகளின் வாகன பயன்பாட்டை வெகுவாக குறைப்பதற்கும், புதிய வாகனங்கள் வாங்குவதற்கு கடும் விதிமுறைகளை வகுத்தளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.