Advertisment

தி.மு.க. கிராம சபைக் கூட்டத்தில் மின் இணைப்பை துண்டித்த ஆளுங்கட்சியினர்!! டென்சனான கிராம மக்கள்!

ip

மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம் மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து, நம்முடைய செயல்பாடுகள் இனி அமையவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஜனவரி 9ம் தேதி அன்று தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதன்படி ரெட்டியார்சத்திரம், தெற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் கோனூர் மைதானத்தில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், பகுத்தறிவாளருமான ப.க.சிவகுருசாமி வரவேற்று பேசினார்.

Advertisment

இந்த கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முப்பெருந்துறை அமைச்சரும், மாநில துணைப் பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி பேசும்போது... கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தில் உள்ள கிராமங்கள் சீரழிந்து வருகின்றன. கிராமங்களில் தண்ணீர் வசதி, மின்விளக்கு, சாலை வசதி இல்லாமல் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமப்படுகின்றனர் என்று ஐ.பி. பேசிக்கொண்டே இருக்கும் போது மைதானத்தில் மின் சப்ளை வரவில்லை. இதனால் டென்சனான கிராம மக்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். அதன்பின் சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்சாரம் வந்ததின் மூலம் லைட் எரிய தொடங்கியது. அதைக்கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் ஆளுங்கட்சியினரின் சதியால் எங்களுடைய கிராம சபைக் கூட்டத்தை நடத்த விடாமல் மின்சாரத்தை கட் பண்ணிவிட்டனர் என்று சத்தம் போட ஆரம்பித்தனர். அதைக்கேட்ட ஐ.பி.யோ, அவர்களை சமாதானப்படுத்திவிட்டு மீண்டும் பேசத்தொடங்கினார்.

p

‘’தி.மு.க. ஆட்சியில் கோனூர் ஊராட்சிப் பகுதியில் பள்ளிக்கூட கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால் கடந்த எட்டு வருடங்களாக இந்த ஊராட்சியில் எந்த ஒரு அரசு நலத்திட்டமும் முழுமையாக செயல்படுத்தவில்லை’’ என குற்றம் சாட்டினர். கூட்டத்தில் பேசிய கிராம பெண்கள் கோனூரிலிருந்து குஞ்சனம்பட்டி செல்லும் வழியில் கோனூர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் செய்தனர். மேலும் கிராம மக்கள் கூறுகையில், கடந்த பொங்கலுக்கு அரசு சார்பாக வழங்கப்பட வேண்டிய ஒரு கிலோ பச்சரிசிக்கு 800கிராமும், ஒரு கிலோ ஜீனிக்கு 400கிராம் ஜீனியும் வழங்கப்பட்டதாக குறை கூறிய அவர்கள் மாதாமாதம் போட வேண்டிய 35 கிலோ அரிசிக்கு பதிலாக 30கிலோ வழங்குவதாகவும், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 20கிலோ இலவச அரிசியை நியாய விலைக்கடைகளில் வழங்குவதில்லை என குறை கூறினார்கள். பொதுமக்களின் குறைகளுக்கு பதில் அளித்து பேசிய இ.பெரியசாமி விரைவில் அந்த மதுபானக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், நியாய விலைக்கடையில் முழுமையாக ரேசன் பொருட்கள் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் மனுக்கள் கொடுக்கப்படும் என்றார். அப்போது பெண்கள், பொதுமக்கள் பலத்த கைதட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபாணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, கன்னிவாடி பேரூர் கழக தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், தர்மத்துப்பட்டி ஊராட்சி செயலாளர் பிரபாகரன், மாவட்ட மாணவரணி ராமமூர்த்தி, வெல்லம்பட்டி நல்லுச்சாமி, கோனூர் ஊராட்சி அவைத்தலைவர் சுப்பாபிள்ளை, கோவிந்தராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்!

periyasami
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe