ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் பெரியார் வனவிலங்கு சரணாலயம் அறிவிக்கும் முன்பு வன உரிமைச் சட்டம் 2006 யை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வந்திருந்த மக்கள் தங்களது மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். அப்போது அந்தியூர், பர்கூர் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் பொது நல அமைப்பினர் திரண்டு வந்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, “தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனால் அந்தியூர், பர்கூர் மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் தங்களது உரிமைகளை இழப்பதாக கருதுகின்றனர். தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்கு முன்பு கீழ்க்கண்டவற்றை அரசு கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும், வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல் செய்ய வேண்டும். கிராம சபையால் வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட வன பகுதி மாவட்ட அளவிலான குழுவால் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டு, கிராம சபைக்கு உரிமை வழங்கப்பட வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பகுதி வனத்துறையின் ஆவணங்களில் காடுகள் என தனி வகையாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கிராம சபையாலும் வன உரிமைச் சட்டத்தை அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
மேற்கூறியவை திருப்திகரமாக நிறைவடைந்த பிறகு, தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் அறிவிப்பில் சமூக வன வள அறிவிப்பிலும் வரைபடத்திலும் சரியான முறையில் இணைக்கப்பட வேண்டும். மேலும் ஒரு வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் முன்பு வன விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 (திருத்தம் 2006ம் ஆண்டு) படி, அரசு ஒரு நிபுணர்குழுவை நியமித்து அப்பகுதியை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும். வனத்தை நம்பி வாழ்ந்து வருகிற மக்களின் கருத்துக்களை கேட்டு, ஒப்புதல் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரம், வளர்ச்சி, சமூக பண்பாட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். வன விலங்குகள் மற்றும் மனித நடவடிக்கைகளுக்கு இடையே சக வாழ்வை ஊக்குவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
ஆனால் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972 (திருத்தம் 2006) சொல்லுகிற எந்த வழிமுறையையும் கடைப்பிடிக்காமலும், வன உரிமை சட்டம் 2006 வழங்கியுள்ள உரிமைகளை அமல்படுத்தாமலும், ஈரோடு மாவட்ட வனப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென்று தங்களை கேட்டுக்கொள்கிறோம். தமிழக வனத்துறையின் தன்னிச்சையான இந்த முன்மொழிவு வனத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு காலம் காலமாக வாழ்ந்து வருகிற மலை வாழ் மக்களுக்கு மிகப் பெரிய அச்சத்தையும், மலைப்பகுதியில் ஒரு பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது” இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.