Periyar University. Workers' union strongly condemns librarian's

சேலம் பெரியார் பல்கலைக்கழக நூலகர் ஜெயப்பிரகாஷின் அடக்குமுறை அத்துமீறல்களுக்கு தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான குற்றவியல் விசாரணையை விரைந்து நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு இரண்டு முறை அறிவுறுத்தியும், துணைவேந்தர் அவரை பணியில் இருந்து விடுவித்ததை கண்டித்து பணி நேரத்திற்கு முன்பாக தொகுப்பூதியப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய தொகுப்பூதியப் பணியாளர்கள் மீது விசாரணை குழுவை அமைத்த துணைவேந்தருக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் நாளை (14-01-25) சேலம் பெரியார் பல்கலைக்கழக விசாரணை வளையத்திற்குள் உள்ள துணைவேந்தர் நிகழ்த்தும் சமத்துவப் பொங்கலை புறக்கணிக்க தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை முடக்குவதற்காக துணைவேந்தரின் கைப்பாவை நூலகர் ஜெயபிரகாஷ் தனது நூலகத்தில் பணியாற்றும் தொகுப்பு ஊதியப் பணியாளர்களை மிரட்டும் வகையில் அவர்களுக்கு பொங்கல் விழா பணியினை ஒதுக்கியுள்ளார்.

Advertisment

இதனை கண்டிக்கும் விதமாக தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளதாவது, ‘பதிவாளர் இதற்கு அனுமதி அளித்தாரா? என்று தெரியவில்லை. பல்கலைக்கழக பதிவாளர் தேர்வாணையர் நிதி அலுவலகம், தொலை நிலைக்கல்வி என்று பல்வேறு அலுவலகங்கள் இருக்கும் நிலையில் நூலகத்தில் பணியாற்றும் தொகுப்பு ஊதியப் பணியாளர்களுக்கு மட்டும் மணி ஒதுக்கி மிரட்டல் விடுக்கும் பல்கலைக்கழக நூலகரின் இந்த ஆடாவடிச் செயலை தொழிலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.