Advertisment

பெரியார் பல்கலை. துணைவேந்தர் விசாரணைக்கு நேரில் ஆஜர்!

 Periyar University Vice Chancellor appears in person for questioning

Advertisment

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் பதவி வகித்து வருகிறார். இவரும், பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேல் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அதில், ‘பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காகத் துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல்’ என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று (25.04.2025) சூரமங்கலம், காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார். அவரை சூரமங்கலம், காவல் உதவி ஆணையர் ரமலி ராமலட்சுமி தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவரிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் கேள்வி எழுப்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

periyar university police commissioner Salem SURAMANGALAM vice chancellor
இதையும் படியுங்கள்
Subscribe