Advertisment

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஓய்வுக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் திடீர் பணியிடைநீக்கம்!

Salem - Periyar University

சேலம் பெரியார் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார், ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத்தலைவராகவும், டீன் ஆகவும் பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார். கடந்த 2010ஆம் ஆண்டு துணைவேந்தராக தற்காலிகமாக பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு, புதிய துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் கிருஷ்ணகுமார் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, பல்கலைக்கழகவிருந்தினர் மாளிகையைப் புதுப்பிப்பதற்காக குளிர்சாதன உபகரணங்கள், அறைகலன்கள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. எழுதுபொருள்கள் கொள்முதல் செய்ததிலும் ரசீதுகளை போலியாக தயார் செய்து, அதிலும் ஊழல் செய்ததாக அவர் மீது மற்றொரு புகாரும் கூறப்பட்டது.

Advertisment

இதுகுறித்த புகாரின்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு செப். 6ஆம் தேதி, கிருஷ்ணகுமார் திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அப்போது துணைவேந்தராக இருந்த முத்துச்செழியன், தனது பணிக்காலம் முடிந்து செல்வதற்கு ஒருநாள் இருக்கையில், கிருஷ்ணகுமாரை பணியிடைநீக்கம் செய்திருந்தார். யாருமே எதிர்பார்த்திராத இந்நடவடிக்கை, அப்போது பல்கலைக்கழகவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தன்னைக் கைது செய்து விடாமல் இருக்க முன் ஜாமினும் பெற்றார். துறையில் நேர்மையானவர் எனப் பெயர் எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சந்திரமவுலி, எப்.ஐ.ஆர். பதிவு செய்து, 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிருஷ்ணகுமார் மீதான வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஏனோ காலம் கடத்தி வந்தார். இதற்கிடையே அவரும் எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்றது வேறு கதை.

இந்நிலையில், பேராசிரியர் கிருஷ்ணகுமார் நடப்பு 2020 ஜூலை 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். தன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் இந்த வழக்கு நீர்த்துப்போய் விட்டதாகக் கருதிய அவர், தனது அனைத்து விதமான அரசியல் தொடர்புகள் மூலமும் ஓசையின்றி ஓய்வு பெறுவதற்கான பணிகளைச் செய்து வந்தார். பல்கலைக்கழகத்தின்முக்கிய அதிகார மையங்களும் அவரை கவுரவமாக வழியனுப்பி வைப்பதற்கான வேலைகளைச் செய்து வந்தன.

நிலைமை இவ்வாறு இருக்க, அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் முழுமையாக எட்டு நாள்கள் இருந்த நிலையில், அவர் திடீரென்று வியாழக்கிழமை (ஜூலை 23) பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். துணைவேந்தர் குழந்தைவேலு அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகுமாருக்கு ஜூனியர்கள், சமகாலத்தவர்கள் பலர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பல்கலைகளில் பணியாற்றி வரும் நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தகவல் பரவியதால் அவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகுமாரிடம் பேசுகையில், ''கடந்த 2013இல் என்னை பணியிடைநீக்கம் செய்ததே உள்நோக்கம் கொண்டது மட்டுமின்றி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அப்போதைய துணைவேந்தர் முத்துச்செழியன் மீண்டும் துணைவேந்தராக வர முயற்சித்தார். அதற்கு நான் இடையூறாக இருந்தேன் என்று கருதி, அதற்குப் பழிதீர்க்கும் நோக்கத்துடன் என்னைப் பணியிடைநீக்கம் செய்தார். அதற்கு அடுத்த சில நாள்களில் என் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது. முகாந்திரமற்ற ஒரு புகாரால் இப்போது நான் ஓய்வு பெறும் நிலையிலும் மன உளைச்சலை கொடுக்கிறார்கள்,'' என்றார்.

''பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான கிருஷ்ணகுமார் தீவிர இடதுசாரி சிந்தனையாளர். தனது துறையில் மட்டுமின்றி, பல்கலை நிர்வாகப்பணிகளிலும் திறமையானவராக இருந்தார். அதனால்தான் அவர் டீன் ஆகவும் நியமிக்கப்பட்டார். எந்தத் துணைவேந்தர் வந்தாலும் அவருடைய திறமையைப் பயன்படுத்திக் கொள்ள தயங்கியதில்லை. தமிழ்த்துறையில் உள்ள ஒரு பேராசிரியர், அவருக்கு எதிரான சங்கத்தைச் சேர்ந்தவர்.

http://onelink.to/nknapp

ஆசிரியர் சங்க தேர்தலின் போதிருந்தே தமிழ்த்துறையில் உள்ள குறிப்பிட்ட அந்த பேராசிரியர், கிருஷ்ணகுமார் மீது மோதல் போக்கைத் தொடர்ந்து வருகிறார். அவரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சிலரும் கிருஷ்ணகுமாரை எப்படியாவது ஓய்வு பெறுவதற்குள் பணியிடைநீக்கம் செய்ய வைத்துவிட வேண்டும் என முதல்வர், உயர்கல்வித்துறை செயலர், ஆளுநர் வரை பெட்டிஷன்களை தட்டி விட்டதாகவும்,'' சொல்கிறார்கள் பேராசிரியர்கள் சிலர்.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழகதுணைவேந்தர் குழந்தைவேலிடம் கேட்டபோது, ''பேராசிரியர் கிருஷ்ணகுமார் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவில் மோசடி புகார் உள்ளிட்ட சில புகார்களின்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளது. இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளபோது ஓய்வு பெற முடியாது. மேலும், கடைசி நாள் அல்லது அதற்கு முதல் நாளன்று பணியிடைநீக்கம் செய்வது என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி விடும். அவருடைய பிறந்த நாள் ஜூலை 27ஆம் தேதி வருகிறது. அதன் அடிப்படையில், அதுவரை காத்திருக்காமல் சில நாள்கள் முன்னதாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்த பிறகே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய அழுத்தமும் இல்லை,'' என்றார்.

suspended Professor periyar university Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe