Skip to main content

பெரியார் பல்கலை. முறைகேடு புகார்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

 Periyar University Complaint of malpractice Higher Education Action Order

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம் மற்றும் அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் முறைகேடுகள் எனத் தொடர்ச்சியாக 37 குற்றச்சாட்டுகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் உயர் கல்வித்துறை சார்பில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் கொண்ட குழுவினர் ஏற்கனவே பல்கலைக்கழக  ஆவணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி, மார்ச் 6 ஆம் தேதி, ஏப்ரல் 27 ஆம் தேதி, மே 29 ஆம் தேதி என நான்கு நாட்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது 37 குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய பெரியார் பல்கலைக்கழக அலுவலர்கள், துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேலு ஆகியோரிடமும் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பிலிருந்து பதில் அறிக்கையும் பெறப்பட்டது. மேலும் முறைகேடு தொடர்பாக ஆவணங்களை விசாரணை குழுவினர் கேட்டிருந்தனர். அப்போது துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேலு ஆகியோர் தங்களிடம் இருக்கும் ஆவணங்களை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கிறோம் எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை விசாரணைக் குழுவிடம் பல்கலைக்கழக தரப்பிலிருந்து ஆவணங்கள் ஏதும் ஒப்படைக்கப்படவில்லை.

 

இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கான ஆவணங்களை 2 வாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும், பதிவாளருக்கும் தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக், 20 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அரசிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும், மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்