
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் 11 மாதங்களுக்குப் பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. உத்தரவிட்டார் அதன்படி, கடந்த 19ஆம் தேதியுடன் ஜெகநாதன் ஓய்வு பெற்றார்.
அதே சமயம் துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 மாதங்கள் உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தில் புதிய பணி நியமனங்கள், பதவி உயர்வு மற்றும் கொள்கை முடிவுகள் சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனக் கடந்த 2017ஆம் ஆண்டு உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இத்தகைய சூழலில் தான் ஜெகநாதன், பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராக பணியாற்றி வரும் பெரியசாமி என்பவரைத் துணை பொறுப்பு துணைவேந்தராக நியமித்தார். பல்கலைக்கழக விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த நியமனத்தை மேற்கொண்டது தொடர்பாகப் பெரியார் பல்கலைக்கழகத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் எனதொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டம் இன்று (28.05.2025) நடைபெற்றது. இந்த ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பெரியசாமியைப் பதவியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக் கல்லூரி கல்வித்துறை இயக்குநர் சுந்தரவல்லி தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பேராசிரியர் சுப்பிரமணி மற்றும் தனியார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகிய மூவர் குழுவினர் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.