
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்குப் பணிக்கு வருவதில்லை என்ற புகார் தொடர்ந்து வந்தது. இதையடுத்து பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய வருகைப்பதிவு முறை அமலுக்கு வந்த தொடக்கத்தில் பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்து வந்தனர். ஆனால் அந்த நடைமுறையும் 'வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆசிரியர்கள் வழக்கம்போல் தாமதமாக வரத் தொடங்கினர்.
இந்நிலையில், செப். 1ம் தேதி முதல், முகம் பதிவு செய்யும் வருகைப்பதிவு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பெரியார் பல்கலையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகப் பிரிவில் உள்ள தொகுப்பூதிய, காலமுறை மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்குள் முகம் பதிவு செய்யும் உபகரணம் மூலம் வருகையை உறுதி செய்யும்படி பல்கலையின் 'நிரந்தர பொறுப்பு' பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

வருகையைப் பதிவு செய்ய என்னதான் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தாலும் பணிக்கு தாமதமாக வந்தே பழக்கப்பட்டுவிட்ட ஊழியர்கள் வழக்கம்போல் தாமதமாக வந்துள்ளனர். செப். 1 மற்றும் 2ம் தேதியில் மட்டும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 75 பேர் காலை 9.30 மணிக்கு மேல்தான் வருகையைப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் நொந்து போன பல்கலை நிர்வாகம், சலுகை நேரத்தையும் கடந்து கால தாமதமாக பணிக்கு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்வது கட்டாயம் என்றும் மீண்டும் கறாராகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடுநிலையான பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசினர், ''ஏற்கனவே போலி அனுபவ சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தவர்கள், பிஹெச்.டி மாணவர்களிடம் வசூல் வேட்டை, மாணவிகளிடம் பாலியல் சீண்டல், பணம் கொடுத்து பணிக்குச் சேர்ந்தவர்கள், முறையான கல்வித் தகுதி இல்லாமல் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், பணி நேரத்தில் வகுப்பில் தூங்கும் ஆசிரியர்கள் எனப் பேராசிரியர்கள், உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள் பலர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.
ஓதுவார், கல்லூரி உதவி பேராசிரியர், முழு நேர பிஹெச்.டி., ஆராய்ச்சி மாணவர் என 'தசாவதாரம்' கமல்ஹாசன் போல ஒரே நபர், ஒரே நேரத்தில் பல வேடங்களில் பணியாற்றியதாக அனுபவச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த பேராசிரியர் மீதான புகாருக்கே இன்னும் விடை தெரியவில்லை.
இவை குறித்து ஏற்கனவே தணிக்கை துறையிலும் பகிரங்கமாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. இதைப்பற்றியெல்லாம் ஏற்கனவே நக்கீரன் புலனாய்வு இதழ் மற்றும் இணையதளத்திலும் விரிவாகச் செய்திகள் வந்துள்ளன. குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம், அரசியல் தலையீடு காரணமாக நேர்மையற்ற ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர். அவர்களால் நேர்மையான ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்து வரும்போது, தேவையின்றி பல்கலை நிர்வாகம் முகம் பதிவு மூலம் வருகையைப் பதிவு செய்யும் உபகரணங்களைப் பொருத்தி உள்ளது. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் நேர்மையாக இருந்தால் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் காலம் தவறாமை உள்ளிட்ட அனைத்து வகையிலும் நேர்மையாக இருப்பார்கள்.
ஆசிரியர்கள் சிலரை ஒடுக்க வேண்டும் என்பதற்காக பல்கலை நிர்வாகம் கால தாமத வருகை குறித்தெல்லாம் பகிரங்கப்படுத்தி வருகின்றனர்'' என விரக்தியாக கூறினார்.