Periyar statue insulted NtK Administrator arrested

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாள் நேற்று (03.02.2025) தமிழக அரசு சார்பிலும், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை ஜாபர்கான் பேட்டையில் அண்ணா நினைவு தின நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மேடையேறிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அஜய் (வயது 32) என்பவர் தந்தை பெரியாரை விமர்சித்து அவரது சிலை மீது காலணி வீசினார்.

Advertisment

இதனைக்கண்ட திமுக நிர்வாகிகள் அஜயை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அஜய் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisment

அப்போது நீதிபதி பிப்ரவரி 18ஆம் தேதி வரை அஜயை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அஜய் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தந்தை பெரியாருக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதனால் அவரை கைது செய்யக் கோரி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.