Periyar statue damage: Political parties involved in the struggle

விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் திருவிக வீதி - காமராஜர் வீதி சந்திப்பு உள்ளது. இந்த இடத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சிலையைச் சுற்றிலும் இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். சிலைக்கு திமுக-அதிமுக, திக போன்ற பல அரசியல் கட்சியினரும், சமூகநல அமைப்புகளும், சுயமரியாதைக் கொள்கை உள்ள பலரும் பெரியார் பிறந்தநாள் மற்றும் அவரது நினைவு நாள் போன்ற தினங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.

Advertisment

அப்படிப் பழமை வாய்ந்த அந்தச் சிலை நேற்று முன்தின நள்ளிரவு அந்த வழியாகச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று மோதியதில்இடிந்து சேதமானது. இதனால் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலையை இடித்துத் தள்ளிய லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்துள்ளது. அந்த லாரி டிரைவர் மச்சீந்திரா திபலி என்பவர் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்திலிருந்து புனேவிற்கு பழைய டயர்களை ஏற்றி கொண்டு சென்றுள்ளார். புதுச்சேரி மார்க்கத்திலிருந்து விழுப்புரத்தைக் கடந்து புனே செல்லும்போது சாலை சந்திப்பில் இருந்த அந்தப் பெரியார் சிலையை கண்டெய்னர் லாரி இடித்து தள்ளி உள்ளது.

Advertisment

இதையடுத்து திமுக நகரச் செயலாளர் சர்க்கரை தலைமையில் திமுகவினர் பெரியார் சிலையை இடித்த லாரி ட்ரைவரை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய சிலை அந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறிபோராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று அதிமுகவினரும் சிலை இடித்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். இது சம்பந்தமாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் லாரி டிரைவர் மச்சீந்திரா திபலி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். சிலை இடிக்கப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் மோகன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, திமுக எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் உட்பட பலரும் பார்வையிட்டனர்.