தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்றாலும் எச்.ராஜாவுக்கு ஆகாதது என்பது அவரது நாக்கு தான். எதையாவது தடலாடியாக பேசுவது, டுவிட்டரில் பதிவிடுவது எச்.ராஜாவின் வாடிக்கை. அது சர்ச்சையானவுடன் அப்படி நான் பேசவில்லை, அப்படி நான் பதிவிடவில்லை, எனக்கே தெரியாமல் எனது 'அட்மின்' பதிவிட்டுள்ளார் என பல்டி அடிப்பதில் அசாயக சூரர் இவர்.

பெரியார் சிலையை இடிப்பேன் என்றது, கனிமொழியை இழிவாக பேசியது என இவரது பேச்சுக்கள் எல்லாம் அட்ராசிட்டி ரகம். கடந்த ஆண்டு திருமயத்தில் நடந்த தகராறின்போது, "தமிழக காவல் துறையின் ஈரல் செத்துப் போச்சு, போலீஸ்காரங்க எல்லாம் லஞ்சம் வாங்குறாங்க, உங்களுக்கு எல்லாம் வெட்கம் இல்லை?" என்று ஒட்டுமொத்த காவல்துறையினரும் மனம் நோகும்படி பேசினார்.
அதோடு விட்டாரா? இல்லை. உயர்நீதிமன்றத்தை 'கூந்தல்' உடன் தொடர்பு படுத்தி பேசிவிட்டு மறுநாள் எனது குரலை டப்பிங் செய்து வெளியிட்டு விட்டார்கள் என்று நீட்டி முழக்கினார். அப்போது 6 தனிப்படைகள்(?) அமைத்து போலீஸ் தேடும் நிலை இருந்தாலும், எச்.ராஜா சர்வ சாதாரணமாக திண்டுக்கல் பொதுக்கூட்டத்திற்கு சென்று, அங்கேயும் அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பத்தினரை சர்ச்சைக்குரிய வகையில் பேசி, அவர்களை வான்ட்டாக வம்புக்கு இழுத்தார். ஆளுங்கட்சியின் ஆதரவு காரணமாக போலீஸாரும் கண்டுகொள்ளாமல் 'கைகட்டி' வேடிக்கை பார்த்தனர்.
ஆனால், உயர்நீதிமன்றம் சுமோட்டாவாக அவதூறு வழக்கு தொடர்ந்து விசாரித்தபோது விசாரணைக்கு ஆஜரான எச்.ராஜா, "அய்யா சாமி ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்யா, உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னிச்சுடுங்கய்யா" என பெரிய கும்பிடுபோட்டு சரண்டர் ஆனார். இதனால், நீதிபதிகளும் செத்த பாம்பை எதுக்கு அடிக்கனும்னு நினைச்சு வழக்கை முடிச்சு வச்சாங்க.
போகிற இடமெல்லாம் வம்பிழுக்கும் எச்.ராஜா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதுள்ள ஈடுபட்டால், அதில் தீவிரமாக இயங்கியவர். பின்னர் பிஜேபியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். எச்.ராஜாவுக்கு தேர்தல் களம் புதிதல்ல. சட்டமன்றம், நாடாளுமன்றம் என 5 முறை போட்டியிட்டார். இதில் ஒருமுறை மட்டுமே வெற்றிக்கனியைப் பறித்துள்ளார்.
1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க - பிஜேபி கூட்டணியில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். அடுத்து, 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - பிஜேபி கூட்டணியில் போட்டியிட்டு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தோல்வி. 2014-ல் பிஜேபி- தே.மு.தி.க அணியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி. 2016 சட்டமன்றத் தேர்தலில் தியாகராயநகரில் போட்டியிட்டுத் தோல்வி. அதன்பிறகு சாரணர் இயக்க தலைவர் தேர்தலில் 52 வாக்குகள் பெற்று படுதோல்வி. இப்போது மீண்டும் சிவகங்கைத் தொகுதியில் போட்டி இட்டு தோல்வி அடைந்திருக்கிறார்.