
சமூகநீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கம் நகரில் தமிழ்நாடு அரசு, கேரள மாநில அரசோடு இணைந்து வைக்கம் பேராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்கள். “தீண்டாமை இந்த நாட்டின் சாபக்கேடு” என்றார் அண்ணல் காந்தியடிகள். தீண்டாமைக் கொடுமையை ஒழித்திட கேரள மண்ணில் வைக்கம் நகரில் நடைபெற்று வெற்றிகண்ட இந்தியாவின் முதல் போராட்டம் வைக்கம் போராட்டம்
"தொட்டால் தீட்டு"என்பார்கள் தொடாமலேயே சிலரை கண்டாலேயே தீட்டு என்ற வழக்கமும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. அதையெல்லாம் விட கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் இருக்கும் தெருவில் நடந்தாலேயே தீட்டாகி விடும். ஆதலால், கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும் கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது எனும் கொடிய தடை இருந்தது. அந்தத் தடையை உடைத்திட 1924-ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம்தான் வைக்கம் போராட்டம்.

வைக்கம், கேரள மாநிலத்தின் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் அடங்கியிருந்த நகரமாகும். அந்நகரிலுள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றி அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் எல்லாம் இருந்தன. ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் என்பவர் தீண்டத்தகாதவர் என்பதால், அந்த நீதிமன்றத்திற்குள் செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனை எதிர்த்துத்தான் வழக்கறிஞர் மாதவன், கேசவ மேனன், டி.கே.மாதவன். பரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் முதலான பலர் போராடினார்கள். அப்படிப் போராட்டம் நடத்திய அனைவரையும் திருவாங்கூர் சமஸ்தான போலீசார் கைது செய்தனர்.
அதனால், போராட்டம் நின்றுவிடும் சூழ்நிலை உருவானது. அப்போது இறுதியாக கைதாகிச் சிறை சென்ற பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் ஆகியோர் கையெழுத்திட்டு; அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதி தாங்கள்தான் வைக்கம் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வெற்றி தேடித்தர வேண்டும் வேண்டுகோள் வைத்தனர் அந்தக் கடிதம் கிடைத்ததும், 13.04.1924 அன்று வைக்கம் நகருக்கு வந்த தந்தை பெரியாரால் போராட்டம் தீவிரம் அடைந்தது.

திருவாங்கூர் மகாராஜா ஏற்கனவே பலமுறை ஈரோடு நகருக்கு வந்து தந்தை பெரியார் இல்லத்தில் விருந்தினராக தங்கியிருந்தவர். ஆதலால், தந்தை பெரியாரை தம் விருந்தினராக நடத்த விரும்பினார். அதைக் காவல் துறையினரும் மகாராஜாவின் அலுவலர்களும் பெரியாரிடம் தெரிவித்தனர். தந்தை பெரியார், நான் அரச விருந்தாளியாக இங்கு வரவில்லை என நயமாகக் கூறி மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தில் மக்கள் திரண்டதைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில் திருவாங்கூர் போலீசார் தந்தை பெரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதல் முறை 1 மாதமும், இரண்டாவது முறை 6 மாதமும் கடுங்காவல் தண்டனை வழங்கி, தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை பெரியார் கைதாகி சிறையில் இருந்தபோது தந்தை பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையாரும்,தங்கை கண்ணம்மாளும் வைக்கம் வந்து போராட்டக்களத்தில் இறங்கினர்.
வைக்கம் நகரைச் சுற்றியிருந்த கிராம மக்களும் திரண்டு தொடர்ந்து போராடியதால் திருவாங்கூர் சமஸ்தான அரசு பணிந்து மகாதேவர் கோயில் தெருக்களில் ஈழவர் முதலான வகுப்பார் நடந்து செல்வதற்கு தடையை நீக்கி எல்லோரும் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்தது. இப்படி, வைக்கம் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ததால் தந்தை பெரியாரை தமிழ் தென்றல் திரு.வி.க. ‘வைக்கம் வீரர்’ எனப் பாரட்டி எழுதினார்.
வைக்கம் வீரர் தந்தை பெரியார் நினைவாக அந்நகரில் தந்தை பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. தந்தை பெரியார், வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் வைக்கம் நகரில் உள்ள தந்தை பெரியார் நினைவகத்தையும். நூலகத்தையும் புதுப்பித்திட 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி ஆணையிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் 12.12.2024 அன்று காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார். இந்த மாபெரும் விழாவிற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையேற்கிறார். திராவிடர் கழகத் தலைவரும், தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவருமான கி. வீரமணி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்புரை நிகழ்த்திடக் கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் நன்றியுரை வழங்குகிறார்.
இந்திய சமூகநீதி வரலாற்றில் தலைமையிடம் பெற்றுள்ள இந்த வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் பங்கேற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோள மாநிலம் வைக்கம் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
சமூகநீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கம் நகரில் தமிழ்நாடு அரசு, கேரள மாநில அரசோடு இணைந்து இந்த மகத்தாக விழாவைக் கொண்டாடுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.