Skip to main content

பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் உள்பட நால்வர் மீது வழக்கு! உதவி பேராசிரியர் அதிரடி!!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019

 

v

வைத்தியநாதன்


பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், அதுகுறித்த புகாரை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி உதவி பேராசிரியர் ஒருவர் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 


சேலம் சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). பெரியார் பல்கலையில் பொருளியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறியுள்ளதாவது:

 

ச்

சுவாமிநாதன்


கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழில் பெரியார் பல்கலையில் அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன் ஊழல் செய்ததாக ஒரு செய்தி, நான் சொன்னதாக வெளியாகி இருந்தது. அப்படி ஒரு தகவலை நான் அளிக்காதபோது, தவறுதலாக என் பெயரில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு அந்த நாளிதழுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக 3.4.2017ம் தேதியன்று நான் பெரியார் பல்கலை நிர்வாகத்திடமும் உரிய விளக்கமும் அளித்துள்ளேன். என்னிடமும் யாரும் உரிய விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆனாலும் கடந்த 4.4.2017ம் தேதியன்று திடீரென்று ஒருதலைப்பட்சமாக என்னை பணியிடை நீக்கம் செய்து அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். 

 

ம்

மணிவண்ணன்


அன்றைய தினம் என்னிடம் விசாரிக்க வேண்டும் என்றுகூறி, சுவாமிநாதன் தன் அலுவலக அறைக்கு என்னை அழைத்தார். அங்கே அப்போதைய பதிவாளர் மணிவண்ணன், இப்போதும் டீன் ஆக உள்ள கிருஷ்ணகுமார் ஆகியோரும் இருந்தனர். நான் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோதே சம்பந்தமில்லாமல், பேராசிரியர் கிருஷ்ணகுமார் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு என் சாதி பெயரையும் கெடுக்கிறாயே என்றார்.


அதற்கு நான் விளக்கம் சொல்ல முயன்றபோது திடீரென்று துணை வேந்தர் சுவாமிநாதன் என் இடது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பதிவாளர் மணிவண்ணனும் என்னை துரத்தி வந்து தாக்கினார். அவர்களிடம் இருந்து தப்பியோடிய நான், ஓட முடியாமல் கீழே மயங்கி விழுந்தேன். அப்போது கீழ் தளத்தில் ஆசிரியரல்லா பணியாளர்கள் பலர் அவர்களின் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். மயங்கிக் கிடந்த என்னை அவர்கள்தான் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம்  ஏற்றிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

ச்

செந்தில்குமார்


நான் தாக்கப்பட்டது குறித்து சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். காவல் ஆய்வாளர் செந்தில்குமார் என்னுடைய புகாரை வாங்க மறுத்தார். ஆய்வாளரும் துணைவேந்தரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என் புகார் மீது எப்ஐஆர் கூட பதிவு செய்யாமல் கடமை தவறி நடந்து கொண்டார். 


உதவி பேராசிரியர் என்றும் பாராமல் என்னை தாக்கிய முன்னாள் துணைவேந்தர், பதிவாளர், இப்போதைய டீன், மற்றும் எப்ஐஆர் பதிவு செய்யாமல் கடமை தவறிய காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் உதவி பேராசிரியர் வைத்தியநாதன் கூறியுள்ளார். இந்த மனு, வரும்  பிப்ரவரி 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்