Skip to main content

பெரியார் பல்கலை: பேராசிரியர் அன்பரசன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை!

Published on 25/11/2018 | Edited on 25/11/2018
p

 

பெரியார் பல்கலையில் நடந்த மோதல் சம்பவம் குறித்து பேராசிரியர் அன்பரசன் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை  விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறையில் அன்பரசன், குமாரதாஸ் ஆகியோர் ஒரே ஆண்டில் ரீடர் பணியிடத்தில்  நியமிக்கப்பட்டனர். அன்பரசன் இங்கு பணியில் சேர்வதற்கு முன்பு அரசுக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வ ந்தார். அதனால் முன்அனுபவத்தைக் கணக்கிட்டு அவருக்கு முதலில் பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு  அடுத்த சில மாதங்களில் குமாரதாசும் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.


இந்நிலையில், இயற்பியல் துறைத்தலைவராக இருந்த கிருஷ்ணகுமார், பெரியார் பல்கலை டீன் பணியில் நியமிக்கப்பட்டார்.  அதனால் ஏற்பட்ட துறைத்தலைவர் காலியிடத்தில் யாரை நியமிப்பது என்ற சர்ச்சை எழுந்தபோது, குமாரதாசுக்கு  துறைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. 


இதனால் பேராசிரியர் அன்பரசன் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்கு அன்பரசன்  ஒரு புகார் அனுப்பினார். அந்த புகாரில், முதலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற தன்னை விட்டுவிட்டு, தனக்குப் பிறகு  பேராசிரியராக பதவி உயர்வு பெற்றவருக்கு துறைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் தன்னை புறக்கணித்துள்ளதாகவும், அப்போதைய துணை வேந்தர் சுவாமிநாதன் மீது  குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.


இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி எஸ்சி, எஸ்டி ஆணையம் பல்கலைக்கு நோட்டீஸ் அளித்தது. இதற்கிடையே,  அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதனின் பதவிக்காலம் முடிந்தது. அதையடுத்து, புதிய துணைவேந்தராக பொறுப்பேற்ற குழந்தைவேல், நிலைய பதிவுமூப்பு அடிப்படையில்தான் குமாரதாசுக்கு துறைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது, என்று எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்கு விளக்கம் அளித்தார்.


இது ஒருபுறம் இருக்க, பல்கலை அலுவலகத்திற்குள்ளேயே கடந்த 2.3.2018ம் தேதியன்று, பேராசிரியர்கள் அன்பரசனுக்கும்,  குமாரதாசுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக்கொண்டனர். காயம் அடைந்த  இருவருமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நால்வர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு, இரு பேராசிரியர்களிடமும் முறையான விசாரணை செய்யாமல் ஒப்புக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், பேராசிரியர் அன்பரசன் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 


அதன்பிறகும், பேராசிரியர்களுக்குள் நடந்த மோதல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நல்லதம்பி தலைமையில் விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.


அந்தக்குழு இதுவரை இரண்டு கட்டங்களாக அன்பரசனிடம் விசாரணை நடத்தியுள்ளது. வரும் 26.11.2018ம் தேதியன்று நடைபெற உள்ள அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி அன்பரசனுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் அன்பரசன், பல்கலையில் நடந்த மோதல் சம்பவம் குறித்து, தனது தரப்பு அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், அதுவரை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வரும் 26.11.2018ம் தேதியன்று அன்பரசனிடம் நடக்க உள்ள விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து 23.11.2018ம் தேதி உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்