
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸின் சொந்த ஊர் பெரியகுளம். இந்த பெரியகுளத்தில் உள்ள நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த 30 வார்டுகளில் ஆளுங்கட்சியான திமுக 12 வார்டுகளையும், அதிமுக 8 வார்டுகளையும், அமமுக 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றின. மேலும், பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றன. இதில் தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் இல்லாததால் கூட்டணிக் கட்சி மூலம் ஆளுங்கட்சி நகர்மன்றத்தை கைப்பற்ற இருந்தது.

இந்த நிலையில், சுயேட்சைகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தரப்போவதாக ஒரு பேச்சு பரவலாக அடிபட்டு வருவதைக் கண்ட தொகுதி எம்.எல்.ஏ.வான சரவணகுமார், உள்பட நகரப் பொறுப்பாளர்களும் சுயேச்சைகளை அழைத்து பேசி திமுகவில் இணைத்தனர். இதன்மூலம் ஆளுங்கட்சியான திமுகவுக்கு 15 கவுன்சிலர் கிடைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஓ.பி.எஸ். வீடு அருகே அமைந்துள்ள 21வது வார்டில், அவர் குடும்பத்துடன் சென்று வாக்களித்த அந்த வார்டில் அதிமுக சார்பில் மஞ்சுளா போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவில் சந்தான லட்சுமி களமிறங்கினார். எம்.எல்.ஏ. உள்பட கட்சி பொறுப்பாளர்களும் ஓ.பி.எஸ். வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பம்பரமாக செயல்பட்டனர்.
இந்நிலையில், திமுக வேட்பாளர் சந்தான லட்சுமி 450 ஓட்டுக்கள் வாங்கினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மஞ்சுளா 352 ஓட்டுக்கள் வாங்கினார். அதன் மூலம் 99 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. அதைக்கண்டு அதிமுகவினரே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இப்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.எஸ். தனது சொந்த வார்டைக் கூட தக்க வைக்க முடியவில்லை என்ற பேச்சு அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.