Skip to main content

அப்பாவின் உடல்நிலை, தங்கை மகள் திருமணம்...பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன்

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், முருகன் மனைவி நளினி என 7 பேர் வேலூர் மத்திய சிறை, புழல் சிறை, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 

perarivaalan gets bail


இவர்களில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை 27 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள்தண்டனையாக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம். கடந்த 29 வருடங்களாக சிறையில் ஏழு பேரும் மனவேதனையில் உழன்று வருகின்றனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துவிட்டது உச்சநீதிமன்றம். தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து ஓராண்டு கடந்த நிலையில் தற்போதும் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் வைத்துள்ளார் ஆளுநர். இதுப்பற்றி பல தரப்பினர் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என குரல் கொடுத்தும், போராடியும் இதுவரை முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில் இவர்களை பரோலிலாவது விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலதரப்பில் இருந்து தமிழகரசை நோக்கி சென்றதால் சிறையில் உள்ள ஒவ்வொருவரை ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒரு மாதம் முதல் 45 நாட்கள், என பரோல் வழங்குகிறது சிறைத்துறை.

இந்நிலையில் கடந்தாண்டு தனது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லை எனச்சொல்லி பரோல் பெற்ற பேரறிவாளன் 45 நாட்கள் பரோலில் வெளியே வந்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்து பின்னர் சிறைக்கு சென்றார்.

ஓராண்டு முடிந்த நிலையில் அவரது தந்தை உடல்நலம் பாதிப்படைந்துள்ளதாலும், பேரறிவாளன் சகோதரியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவரது தாய் அற்புதம்மாள், தனது மகனுக்கு பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நவம்பர் 12ந்தேதி வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

இன்று முதல் 30 நாட்கள் பரோலில் தனது வீட்டில் தங்கவுள்ள பேரறிவாளனுக்கு நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 28 ஆண்டுகளில் இரண்டாவது முறை பரோலில் அவர் வருவது குறிப்பிடத்தக்கது. பரோல் முடியும் காலம் வரை அவரது வீட்டிற்கு திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு எஸ்.ஐ உட்பட 35 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
 

perarivaalan gets bail


பேரறிவாளன் வீடு உள்ள பகுதிக்கு 3 தெருக்கள் வழியாக வரலாம், அந்த மூன்று தெருக்களிலும் போலீஸார் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த சாலை வழியாக யார் சென்றாலும் விசாரித்த பின்பே அனுப்புகின்றனர்.

தனது மகன் பரோலில் வெளிவந்துள்ளது குறித்து அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசும் போது, "இரண்டாவது முறையாக என் மகன் பரோலில் வெளியே வருகிறான். அது எனக்கு மகிழ்ச்சி தான். இருந்தாலும் விடுதலையாகி அவன் வெளியே வரும்போது தான் முழுமையாக மகிழ்ச்சியடைவேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த பரோலுக்கு காரணமான அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம், என் மகனுக்கு இந்த அரசு விடுதலை வாங்கி தரும் என நம்புகிறோம்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

6 பேர் விடுதலை; நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

 6 persons acquitted; Perariwalan who directly went and welcomed

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று  உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 6 persons acquitted; Perariwalan who directly went and welcomed

 

இந்நிலையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பாக இன்று மதியம் வேலூர் மத்திய சிறைக்கும் வேலூர் பெண்கள் தனிச் சிறைக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் அனுப்பப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து 31 ஆண்டுகளுக்குப் பின் வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்த நளினி விடுதலை செய்யப்பட்டார். பரோலில் இருந்த நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறைக்குச் சென்று தனது பரோலை ரத்து செய்ய கடிதம் வழங்கிய பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

அதே போல், புழல் சிறையிலிருந்து ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த பேரறிவாளன், இன்று விடுதலையான ராபர்ட் மற்றும் ஜெயக்குமாரை வரவேற்பதற்காகப் புழல் சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளிவந்த ராபர்ட் பயாஸை கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன், அவருடன் சிறிது நேரம் உரையாடிய பின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

 

 

Next Story

விடுதலைக்குப் பின் முருகன், சாந்தன் உள்ளிட்டோரின் முடிவு என்ன? வழக்கறிஞர் பதில்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

What was the result of Murugan, Shanthan and others after liberation? Lawyer answer!

 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக் கைதிகளாக வேலூர் மத்தியச் சிறையில் கடந்த 31 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள் முருகன், நளினி, சாந்தன் உட்பட 6 பேர். இதில் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். 

 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை வேலூர் மத்தியச் சிறையில் உள்ள சாந்தனிடம் அவரது வழக்கறிஞர் ராஜகுரு தெரிவித்தார். அதோடு வழக்கு விசாரணை பற்றிய தகவலை சாந்தன், முருகன் இருவரிடமும் தெரிவித்தார்.

 

சிறைக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜகுரு, “இந்த தீர்ப்பினை வரவேற்பதாகவும் இதற்காக உழைத்த வழக்கறிஞர்கள், நீதியரசர்கள், தமிழக மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சாந்தன் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார். பிறகு ஸ்ரீலங்கா செல்லத் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு பாஸ்போர்ட் போன்ற உதவிகளைச் செய்ய கோரிக்கை வைத்துள்ளார். முருகன், சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் வேலூரில் தனது மனைவியுடன் தானும் இருக்கப் போவதாக தெரிவித்தார்.” எனக் கூறினார்.