
நேற்று முன்தினம் (06.11.2021) இரவு முதலே சென்னையில் விட்டுவிட்டுத் தொடர்ந்து மழை பொழிவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர், ஆர்.கே. நகரில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. திருவொற்றியூரில் அண்ணாமலை நகர், கலைஞர் நகர். ராஜாஜி நகர், ராஜா சண்முகம் சாலை என முக்கிய பகுதிகளிலும் சூழ்ந்த தண்ணீர், வீடுகளுக்குள் புகுந்தது. புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை வேண்டுமென ஆவடி மாநகராட்சி அருகே மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பத்தூர், ஆவடி ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. வெளியூரிலிருந்து வந்தவர்கள் அங்கிருந்து பேருந்து மூலம் வீடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

சென்னையில் இன்று காலைமுதல் மீண்டும்தொடர்ந்து மழை பொழிந்துவருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளம் சார்ந்த புகார்கள் குறித்துத் தெரிவிக்க அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-25619206, 044-25619207, 044-25619208 எண்களைத் தொடர்புகொண்டு பாதிப்புகள் குறித்து தகவலளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1913 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு புகாரளிக்க முடியும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலேயே கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை பெரம்பூரில் 14 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)