/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ajith-art.jpg)
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மங்கலமேடு பகுதியில் உள்ள நரி ஓடை பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 43). இவருக்கு திருமணமாகிமனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வருபவர் அஜித் (வயது 26). இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை என குடும்பம் உள்ளது.
இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் ரஜினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் ரஜினி ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், அப்பெண் அதையும் மீறி கணவர் வெளியில் செல்லும் நேரங்களில் ரஜினியை தன் வீட்டிற்கு வரவழைத்து அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளார். இவர்களின் இந்த திருமணத்தை மீறிய உறவு ரஜினியின் குடும்பத்தினர் உட்பட மற்ற உறவினர்களுக்கும் தெரியவந்ததற்கு காரணம் அஜித் தான் என்று ரஜினி கருதினார். இதனால் அஜித் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார் ரஜினி.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியூர் சென்று வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு திரும்பியரஜினி அதிக அளவு மது அருந்திவிட்டு, அந்த போதையில் அஜித் வீட்டிற்கு சென்றுஅவரிடம் தகராறுசெய்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ரஜினி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் அஜித்தை சுட்டார். இதில் அவரது தோள் மற்றும் கையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. துப்பாக்கியால் சுடப்பட்டதால்ரத்த வெள்ளத்தில் அஜித் சரிந்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அஜித்தை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அஜித் இறந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர். அஜித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ரஜினி அந்த துப்பாக்கியுடன் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் ரஜினி மீது கொலைவழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)