Skip to main content

“பாஜக அரசுக்கு மக்கள் பன்மைத்துவத்தின் அர்த்தத்தைப் புரிய வைப்பார்கள்” - கனிமொழி எம்.பி.

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

People will make the BJP government understand the meaning of pluralism Kanimozhi MP

 

அலுவல் மொழி தொடர்பான 38வது நாடாளுமன்றக் கூட்டம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமையடையாது என்றும், உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழியை ஏற்றுக்கொள்வோம். இந்தி எந்த ஒரு மாநில மொழிக்கும் போட்டி அல்ல. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலிமை பெறும்.

 

எந்த விதமான எதிர்ப்புமின்றி அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இல்லாமல், நல்லிணக்கம், உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக நிகழ வேண்டும். ஆட்சி மொழியை (இந்தி) ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், “பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது இந்தித் திணிப்பு. இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மக்கள் ‘பன்மைத்துவ’த்தின் அர்த்தத்தை விரைவில் புரியவைப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது