Skip to main content

தவறு செய்தால் மக்கள் புறக்கணிப்பார்கள்! உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

People will ignore you if you do it wrong! M.K.Stalin's advice to local government representatives!!

 

உதவி செய்தால் மக்கள் உங்களை நோக்கி வருவார்கள். தவறு செய்தால் உங்களை புறக்கணிப்பார்கள் என்று, நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

தி.மு.க.வைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டை  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடந்தது. 

 

தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, மாநாட்டைத் துவக்கி வைத்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வரவேற்றார். 

 

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அதில் உங்களின் உழைப்பு, தியாகம், திறமை ஆகியவை இருக்கிறது. 

 

இங்கே பெண்கள் அதிகமாக இருக்கிறீர்கள். ஆண்களை விட பெண்கள் இத்தகைய பொறுப்புக்கு வரும்போது எத்தனையோ சிரமத்தை அடைந்து இருப்பார்கள் என்பதை நான் அறியாதவன் அல்ல. எத்தனை அவமானங்கள், எத்தனை வீண் பழிகள், எத்தனையோ தடைகள் என அனைத்தையும் தாண்டி இந்த பொறுப்புக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

 

எவ்வளவு கவனத்தோடு உழைத்து இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறீர்களோ அதே கவனத்தோடு, நீங்கள் உழைக்க வேண்டும். நீங்கள் அமர்ந்திருக்கும் பொறுப்பு சாதாரணமானது அல்ல. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பொறுப்பு போல உயர்ந்தது அல்ல என்று நினைக்கலாம். உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களின் உயிர்நாடி.  

People will ignore you if you do it wrong! M.K.Stalin's advice to local government representatives!!

பெரியார், ராஜாஜி, காமராஜர் ஆகியோர் முதன்முதலில் நகராட்சித் தலைவராகத்தான் தங்களின் அரசியல் பயணத்தைத் தொடங்கினர். பேரறிஞர் அண்ணா, சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டவர். இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் நானும் கூட சென்னை மாநகராட்சி மேயராகவும் இருந்திருக்கிறேன். அமைச்சர் கே.என்.நேருவும் லால்குடி நகராட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.  

 

மக்கள் பணியில் முதல் படி என்பது  உள்ளாட்சி அமைப்புகள்தான். அந்த அமைப்புகள் மூலமாகத்தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றும் பயிற்சியை பெற முடியும். அந்த வகையில், மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக, பயிற்சி பெறுவதற்காக  உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கான பயிற்சி பாசறையைத்தான் நாமக்கல்லில் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறோம். நாம் நின்றால் மாநாடு. நடந்தால் ஊர்வலம். 

 

இதனை மாபெரும் மாநாடாக அமைச்சர் கே.என். நேருவும், மாவட்டக் கழக செயலாளர் ராஜேஷ்குமாரும் ஏற்பாடு செய்துள்ளனர். நான் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்று இல்லாமல் மற்றவரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர் கே.என்.நேரு. அதனால்தான் இந்த மாநாடு, வெற்றி மாநாடு என்று   போற்றப்படும் அளவுக்கு, நம்முடைய ராஜேஷ்குமாரையும் சேர்த்து வெற்றி பெற வைத்துவிட்டார். 

 

இந்த மாநாட்டை நடத்த, புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று யோசித்த நேரத்தில், அதற்கான பொறுப்பை ஏற்றார் ராஜேஷ்குமார். நான் வைத்த தேர்வில் ராஜேஷ்குமார் பாஸ் ஆகிவிட்டார். முதல் மதிப்பெண் பெற்று விட்டார். அவருக்கு வாழ்த்துகள். இங்கு வரும்போது, 13 கி.மீ. தொலைவில் இருந்து மக்கள் அலையில் நீந்திதான் வந்தேன். 

 

அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது நினைத்தேன்... உள்ளாட்சி மாநாட்டிற்கு பதிலாக மாநில மாநாட்டை நடத்தி இருக்கலாம் என்ற எண்ணம் வந்துச்சு. நாமக்கல்லை, திமுக கோட்டையாக மாற்றிக்காட்டிய ராஜேஷ்குமாரை மனதார பாராட்டுகிறேன். கே.என்.நேரு ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர் என்றால், ராஜேஷ்குமார் ஸ்டேட் பிளேயராக வெற்றி பெற்றிருக்கிறார். 

 

வரலாற்றுப் புகழ் பெற்ற நாமக்கல்லில் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டம் இது. ஒன்றிருந்தால் ஒன்று இல்லை என்று இல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களும் எல்லா வளமும் பெற்ற ஊராக மாற வேண்டும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது. 

 

எத்தனையோ மாநாடுகளில் பேசியிருந்தாலும், நான் முதலமைச்சராக கலந்து கொள்ளும் முதல் மாநாடு இந்த உள்ளாட்சி மாநாடுதான்.மிகமிகச் சிறு வயதில் ஆழமான அரசியல் கருத்துகளை உள்வாங்கி, கலைஞரின் வழியில் இந்த இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன். கலைஞர் என்னிடம், படி... படி... படி... என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தார். 

 

பள்ளிப்படிப்பை விட அரசியல் படிப்பில்தான் எனக்கு அதிக ஆர்வமாக இருந்தது. பதவி, மாலை மரியாதைக்காக அல்ல. இந்த நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த முடிவுக்கு வந்தேன். 

People will ignore you if you do it wrong! M.K.Stalin's advice to local government representatives!!

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரைப் போல மக்கள் பணியாற்ற வேண்டும். கொள்கைகளுக்காக, லட்சியத்திற்காக உழைக்க வேண்டும். அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு, முதலில் கிடைத்தது மலர் மாலைகளோ பாராட்டுகளோ அல்ல. எனக்குக் கிடைத்தது சிறைச்சாலைதான். துன்ப, துயரங்கள் வரவேற்றது. திருமணம் ஆன ஐந்தே மாத காலத்தில் ஓராண்டு காலம் மிசா கைதியாக சிறையில் இருந்தேன். 

 

அப்போது, எனக்கு கட்சியே வேண்டாம். அரசியலே வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போனவர்கள் பலர் உண்டு. திமுகவை விட்டு விலகுகிறேன் என்று எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்வதாகக்கூட கூறினர். அப்படி எழுதிக் கொடுக்க மறுத்தவன் நான். யாரும் எழுதிக் கொடுக்க வேண்டாம் என்று சொன்னவன் நான். 

 

சிறையில் இருந்து 1977- ஆம் ஆண்டு வெளியே வந்தேன். முதன்முதலாக 1989- ஆம் ஆண்டுதான் சட்டமன்றத்தில் நுழைந்தேன். மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் நுழைய எனக்கு 12 ஆண்டுகள் பிடித்தன. ஏன் சொல்கிறேன் என்றால், பொறுப்புகள் உடனடியாக கிடைத்து விடாது. கடுமையாக உழைக்க வேண்டும். பொறுப்புக்காக காத்திருக்க வேண்டும். 

 

இது, கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ள மாபெரும் பேரியக்கம். இங்கே பொறுப்புகள் சில ஆயிரம் பேருக்குதான் கிடைக்கும். வாழ்க்கையிலே எந்த பொறுப்புக்கும் வராமல் கழகத்திற்காக உழைப்பை மட்டும் தந்துவிட்டு கடைசிவரை அதிகாரத்திற்கு வராமல் இறந்து போனவர்கள் பலர் உண்டு. 

 

மாறாக, நீங்கள் ஒரு பொறுப்பை அடைந்து இருக்கிறீர்கள். ஒரு பொறுப்பு  உங்களைத் தேடி வந்திருக்கிறது. அதைப் போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. பதவிகளுக்கோ பொறுப்புகளுக்கோ வருவது முக்கியம் அல்ல. அதை தக்க வைத்துக் கொள்வதுதான் முக்கியம். பொறுப்புக்கு வந்தவர்கள், அதே பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். 

 

உங்கள் கையெழுத்தின் வலிமையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். தண்ணீரின்றி தவிக்கக்கூடிய மக்களுக்கு நீங்கள் நிறைவேற்றிக் கொடுக்கும் திட்டத்தால் அவர்களின் தாகம் தீருமானால், நீங்கள்தான் மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள். உங்கள் ஒரு கையெழுத்தால் சாலை போட்டுத்தர முடியும் என்றால் நீங்கள்தான் மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள். 

 

உங்கள் ஒரு கையெழுத்தால் ஒரு மருத்துவமனையை உருவாக்கித் தர முடியும் என்றால் நீங்கள்தான் சக்தி படைத்தவர்கள். சாக்கடை கழிவுநீர் சாலையிலே ஓடாமல் கால்வாயில் ஓடக்கூடிய வாய்ப்பை உருவாக்கிவிட்டால், சுகாதாரத்தை பேணிக்காக்க உங்கள் கையெழுத்து உதவுமானால் நீங்கள்தான் மிகப்பெரிய சக்தி படைத்தவர். 

 

இந்த சக்தி உங்கள் கையில் இருக்கிறது. இந்த சக்தியை மக்களுக்காக மட்டுமே பயன்படுத்துங்கள். ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டு காலத்தில் நான் இட்ட கையெழுத்துகள், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒளியை உருவாக்கி, இருளை போக்கி இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் என்னுடைய ஒரே கையெழுத்தால் பயன் பெற்றுள்ளனர். 

 

இந்த சக்தி என்பது தானாக வந்துவிடவில்லை. முதலமைச்சர் என்ற சக்தியை உருவாக்கி என்னிடம் தந்தவர்கள் மக்கள். அந்த சக்தி, பலம், அதிகாரம் மற்றும் பொறுப்பின் மூலமாக ஓராண்டு காலத்தில் பல சாதனைகளை என்னால் செய்ய முடிந்தது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பாராட்டுகிறார்கள். வாழ்த்துகிறார்கள். மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவனாகவும், மக்களுக்கு திட்டங்களை தீட்டுபவனாகவும் இருக்கிறேன் என்பதால்தான் பாராட்டுகிறார்கள். 

 

இத்தகைய பாராட்டையும், வாழ்த்தையும் நீங்கள் பெற வேண்டும். பெறுவீர்களா? இதை நீங்கள் பெறுவீர்களா? மக்களுக்கு நன்மை செய்வதன் மூலம் பாராட்டைப் பெற வேண்டும். 

 

மக்களிடம் நல்ல பேரை வாங்குவதுதான் அனைத்திலும் சிரமமானது. 50 ஆண்டுகளாக மக்களை நான் சந்தித்து வருகிறேன். மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். கூட்டமாக நிற்பார்கள். ஆனால் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருப்பார்கள். நம்மை நோக்கி மகிழ்ச்சியுடன், மலர்ச்சியோடு வந்தால்தான் பாசிட்டிவான மனோபாவம். 

 

இத்தகைய மனோபாவத்தை மக்களிடம் இருந்து நீங்கள் பெற வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து, புரிந்து நீங்கள் உதவி செய்தால் மக்கள் உங்களை நோக்கி வரத்தான் செய்வார்கள். அதேநேரம், தவறு செய்தால் உங்களை விட்டு மக்கள் விலகுவார்கள். உங்களை புறக்கணிப்பார்கள். 

 

மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் பணியாற்ற வேண்டும்." இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

இந்த மாநாட்டில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அமைச்சர் கே.என்.நேரு, ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் முதலமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கினர். 

 

முன்னதாக, எம்.பி.க்கள் ஆ.ராஜா, திருச்சி சிவா, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் மற்றும் சுப.வீ., பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அமைச்சர் மதிவேந்தன் நன்றி கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.