
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 21-ஆம்தேதி அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் வடிவேலு தலைமையில், அரச்சலூரையடுத்த குள்ளரங்கம் பாளையத்தைச் சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையைத் திரும்ப ஒப்படைக்க வந்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. பிறகு அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை அடங்கிய மனுவைக் கொடுத்தனர்.
அவர்கள் கூறும்போது, "நாங்கள் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த குள்ளரங்கம் பாளையத்தில், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகக் குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். அனைவரும் தினக்கூலி வேலை செய்துவருகிறோம். எங்கள் குடும்பங்களுக்கு ஏற்கனவே வீடுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள சில குடும்பங்களுக்கு வீடுமனைப்பட்டா வழங்கவில்லை. இடநெருக்கடி காரணமாக காலியாக உள்ள இடத்தில், ஓட்டு வீடு மற்றும் ஓலைக்குடிசை அமைத்துக் குடியிருந்து வருகிறோம். நாங்கள் பலமுறை வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டையைத் திரும்ப ஒப்படைக்க முடிவுசெய்து இங்குவந்தோம்."என்றனர்.
இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் உங்களுக்கு விரைவாக வீடுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்று மக்கள் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையைத் திரும்ப எடுத்துச் சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)