ADVERTISEMENT

இரவில் கொட்டும் பனியில் ரேஷன் கடை வாசலில் காத்துக் கிடக்கும் பொதுமக்கள்!

01:20 PM Feb 29, 2024 | ArunPrakash

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதன்மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 நபர்கள் மட்டுமே தங்கள் ஆதார் எண்ணை தங்களது குடும்ப அட்டையோடு இணைத்துள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு, ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாலும், கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே கைரேகையைப் பதிவு செய்துள்ளதால், மற்றவர்களும் கட்டாயம் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் அவர்கள் பெயர் கார்டில் இருந்து நீக்கப்படும், பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பதட்டமடைந்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதாவது, நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது. விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும். பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் குழப்பமின்றி பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெயர் நீக்கப்படும் என்கிற தகவலை ரேஷன் கடை ஊழியர்கள் திரும்ப திரும்ப பொதுமக்களிடம் கூறி பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அட்டையில் உள்ள பெரியவர்கள், வயதானவர்கள் சென்று கைரேகை வைக்கின்றனர். அதோடு பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளை லீவு போடவைத்து அவர்களை அழைத்துக்கொண்டு சில பெற்றோர்கள் நியாய விலைக்கடை வாசலில் நின்று கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல இடங்களில் இரவு நேரங்களில் நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் கைரேகை வைத்துவருகின்றனர். பணியிலும் வயதானவர்கள் வரிசையில் காத்திருந்து கைரேகை வைக்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கைரேகை வைக்க இறுதி தேதி என அரசு எதுவும் அறிவிக்கவில்லை, கட்டாயம் உடனே வைக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆனாலும், பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு அரிசி வழங்கப்படாது என ஊழியர்கள் தொடர்ச்சியாக தெரிவிப்பதாக குற்றம்சாட்டி வரும் மக்கள், இதன் காரணமாக ஆதார் கார்டு கைரேகை வைப்பதற்காக தொடர்ந்து பொதுமக்கள் இரவு எட்டு மணியில் இருந்து தற்போது வரை காத்துக் கிடக்கும் அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT