ADVERTISEMENT

தலைவிரித்தாடும் குடிதண்ணீர் பஞ்சம்... புழுக்கள் நெளியும் தண்ணீரை வடிகட்டி குடிக்கும் கிராமமக்கள்

05:37 PM Nov 06, 2019 | kalaimohan


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், வக்கம்பட்டி ஊராட்சி, செம்பட்டி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் வக்கம் பட்டி, பழைய வக்கம்பட்டி, தெற்கு தெரு,எம்.ஜி.ஆர்.நகர், மாதா நகர், உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குறிப்பாக வக்கம்பட்டி ஊராட்சியில் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாலும், ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிதண்ணீரை எடுத்துவிடாமல் இருப்பதால் முப்பது முதல் நாற்பது நாட்களுக்கு ஒருமுறைதான் குடிதண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனால் பொதுமக்கள் குடிப்பதற்காக ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிதண்ணீரை 200 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்களில் பிடித்து வைத்து பயன்படுத்துகின்றனர். இதனால் டிரம்களில் புழுக்கள் உண்டாகி வருகின்றன. பொதுமக்கள் துணி மூலம் புழுக்களை வடிகட்டி பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளனர். குறிப்பாக தெற்குதெரு பகுதியில் சாலை முழுவதும் நூற்றுக் கணக்கான டிரம்கள் தெருக்களை அடைத்தது போல் உள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள வடிகாலை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பாக யாரும் வருவதில்லை. பெரும்பாலும் ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் புகார் செய்ய முடியாத நிலை உள்ளது.


இது குறித்து வக்கம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ஸ்டெல்லாமேரி கூறுகையில், இப்பகுதியில் சாக்கடை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பலருக்கு மர்மக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆய்வுக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியனின் காலை பிடித்து கெஞ்சியும் கூட எங்களுக்கு நாற்பது நாட்களுக்கு ஒருமுறைதான் குடிக்க தண்ணீர் வருகிறது. அதனால் நாங்கள் டிரம்களில் பணம் கொடுத்து வாங்கி பிடித்து வைக்கும் தண்ணீர் புழு வைத்தாலும் கூட நாங்கள் அதை பயன்படுத்தும் நிலையில் உள்ளோம் என கண்ணீர் மல்க கூறினார். இதுகுறித்து நாங்கள் புகார் செய்தாலோ அல்லது மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநரிடம் கூறினாலோ நாற்பது நாட்களுக்கு ஒருமுறை வருகின்ற தண்ணீரையும் நிறுத்தி விடுவோம் என ஊராட்சி நிர்வாகத்தினர் மிரட்டுகின்றனர். என்றார்.

தெற்கு தெருவை சேர்ந்த அங்கயற்கண்ணி மற்றும் தனலெட்சுமி கூறுகையில், பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி செயலர் பால்ராஜிடம் புகார் செய்தும் அதை கண்டுகொள்வதில்லை. நாங்கள் தினசரி கூலி வேலைக்கு வெளியூர் சென்று விட்டு திரும்ப வரும்போது ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டிக்கிடக்கும் இதனால் நாங்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறோம். புழுக்கள் மிதந்தாலும் வடிகட்டி பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளோம் மேலும் இப்பகுதியில் சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யாததால் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது என்றார். மாவட்ட ஆட்சியர் ஒருமுறையாவது எங்கள் வக்கம்பட்டி தெற்குதெரு பகுதிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தால்தான் எங்களின் குடிதண்ணீர் கஷ்டம் தெரியும் என கண்ணீர் மல்க கூறினார்கள்.

தமிழகம் முழுவதும் டெங்கு புழுக்களை கட்டுப்படுத்துங்கள் என தமிழக அரசு அறிவித்து வரும் நிலையில் வக்கம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் புழுக்கள் மிதக்கும் தண்ணீரை குடிக்கும் அவலநிலையில் உள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT