
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,859 பேருக்கு கரோனா செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை என்பது 25,55,664 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 68 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 103 ஆக பாதிப்பு அதிகரித்தது. அதேபோல் நேற்று சென்னையில் மேலும் 181 பேருக்கு கரோனா உறுதியாகியது. சென்னையில் ஏற்கனவே நேற்று முன்தினம் 164 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 3வது நாளாக சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு கேரளாவிற்கு குழு ஒன்றையே அனுப்பியுள்ளது.
இந்நிலையில் மேலும் ஒருவாரம் (அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை) தற்பொழுதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக எந்த தளர்வுகளும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மக்கள் அதிகம் கூடுவதாக தெரிந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசார் அந்த பகுதியை மக்கள் நலன் கருதி அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில அறிவுறுத்தல்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். அதில், ''கரோனா மூன்றாம் அலை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலையை தடுக்க அவசியமின்றி மக்கள் வெளியே வரவேண்டாம். வருமுன் காத்தலே விவேகம், இதுநாம் பொறுப்புடன் இருக்கவேண்டிய நேரம். மூன்றாவது அலை தமிழகத்தில் ஏற்படவே முடியாத வகையில் முகக்கவசம், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.