/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cuddalore-inspec-1.jpg)
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கரோனாதொற்று ஏற்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக 150 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா கடலூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகர் சகாமுரி தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர் ராஜகுமாரன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சித்தா சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும்போது, "தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நோய்த்தொற்று பரவா வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நமது கடலூர் மாவட்டத்தில் 1,31,391 நபர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 15,461 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11,280 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,182 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்துக்கும்மேல் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் தொற்று உள்ளவர்கள் அதிகமாக கண்டறியப்பட்டு நோய் பரவாமல் தடுக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் விரைவில் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் பரவல் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு, கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாகும்.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 150 படுக்கை வசதியுடன் கூடிய முழுமையாக சித்த மருத்துவ முறையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் படுக்கை வசதி, கழிப்பிட வசதி, சிகிச்சை பெறுவோருக்கு தேவையான சோப்பு, சீப்பு, துண்டு போர்வை போன்ற அனைத்து தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும். மேலும் சித்த மருத்துவ முறையில் நடைப்பயிற்சி, மூச்சு பயிற்சி, கபசுரக் குடிநீர், மூலிகை சிற்றுண்டி, வேது பிடித்தல், நோய்க்காப்பு சித்த உணவுகள், மிளகு சாதம்,உளுந்து சாதம், வாழைப்பூ பொரியல், சீரகத் தண்ணீர், நெல்லிக்காய் சாதம் காய்கறி கூட்டாஞ்சோறு, எலுமிச்சை இஞ்சி ரசம், மொச்சை பீன்ஸ் பொரியல், மணத்தக்காளி கூட்டு, தூதுவளை போன்ற உணவுகள் வழங்கப்பட்டு குறுகிய நாட்களில் நோய்த்தொற்று சரிசெய்யப்பட்டு நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அரசு எவ்வளவு தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, சமூக இடைவெளி கடைபிடிப்பதன் மூலமே நோய்த்தொற்று பரவலைத் தடுக்க முடியும். பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் கீதா, கடலூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி,கரோனா சிகிச்சை மைய ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் செந்தில் குமார்மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)