Skip to main content

சித்த மருத்துவத்துடன் கூடிய மருத்துவமனை கேட்டு கிராம மக்கள் மனு!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
555

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 5000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரும் திருமழபாடியில் சித்த மருத்துவத்துடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே திருமழபாடியில் சித்த மருத்துவமனை சிறப்பாக இயங்கி வந்தது.

 

பிறகு காலப்போக்கில் சித்தமருத்துவர் புள்ளம்பாடிக்கு மாற்றப்பட்டார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பஞ்சாயத்து சார்பில் இடம் வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற தகவலையும் கேட்டுக்கொண்டதோடு கிராம மக்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 

மேலும் அவர் பொதுமக்களிடம், அமைச்சரவை கூட்டத்தில் இந்த கோரிக்கை குறித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக திட்டப்பணிகள் துவங்கும் எனவும் கூறியதால், கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளதாக மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டத்தால் செம்பியக்குடி, குலமாணிக்கம், இலந்தைக்கூடம், கண்டராதித்தம், மேட்டுத்தெரு, அரண்மனைக்குறிச்சி, பாளையபாடி கோவில், எசனை விளாகம் உள்ளிட்ட 15 கிராம மக்கள் பயனடைவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.