People involved in a scuffle over a private bus

கள்ளக்குறிச்சி மாவட்டம், மோகூர் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தின் தெருக்களில் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லை. இந்தக் கிராமத்தில் யாராவது இறந்தால், சுடுகாட்டிற்குக் கொண்டுசென்று அடக்கம் செய்ய வழி இல்லாமல் இருக்கிறது. இப்படி கிராமத்தில் பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன.

Advertisment

இதில் குறிப்பாக, சுடுகாட்டிற்குச் செல்ல வழியில்லாததால் அக்கிராமத்தினர் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அனுப்பியும் முறையிட்டும் சுடுகாட்டுக்குப் பாதை ஏற்படுத்தித் தரவில்லை. இதனால்அக்கிராமத்து மக்கள் பொறுமை இழந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (05.09.2021) பெய்த மழையின் காரணமாக தெருவில் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து தேங்கி தெரு முழுவதும் கழிவுநீராக இருந்தது. இதனால் நோய் பரவும் நிலை ஏற்பட்டது.

Advertisment

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அக்கிராமத்து மக்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கள்ளக்குறிச்சியில் இருந்து மோகூர் வழியாகச் சென்ற தனியார் பேருந்தை மறித்து அதன்முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்டபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்துப் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை நீர் தேங்காதவாறு கழிவுநீரை வெளியேற்றுவதற்கு கால்வாய் வசதி சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.