Skip to main content

காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

People involved in a road blockade condemning the police

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் வேப்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாசார் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்.  இவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.  கடந்த மூன்று வருடமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் வேலூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரை கொத்தடிமையாக வைத்து நடத்தியுள்ளார். இவர் தான் வேலை செய்த சம்பளத்தை கேட்டதால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், கணேசனை கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ளார். இதற்கு துணை போன காவல்துறையை கண்டித்து நேற்று (24.01.2022) கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மேற்படி காவலர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்காமல் கொலை செய்த நாகராஜ் குடும்பத்துடன் கையெழுத்து பெற்று விட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்காமல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று விருத்தாச்சலம் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.  மேலும் உரிய விசாரணை செய்து பிரேத பரிசோதனை செய்திடவும் குற்றவாளியை கைது செய்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். போராட்டம் நடந்த அந்த நேரத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

People involved in a road blockade condemning the police

 

அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரிந்துவிடும் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் தற்போது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். கோழிப் பண்ணை உரிமையாளருக்கு ஆதரவாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் செயல்படுவதாகவும் குற்றத்தை மறைப்பதற்கு இவர்கள் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்