Skip to main content

யூடியூப் மூலம் மோசடி? - புகாருக்கு எதிராகத் திரண்ட மக்கள்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
People gathered against the complaint for Scammed by YouTube on covai

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சக்தி ஆனந்தன் என்பவர், தனியார் எம்.எல்.எம் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், இந்த நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு யூடியூப் சேனலும், செயலி ஒன்றும் இயக்கி வந்துள்ளார். இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் ஈட்டலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், எம்.எல்.எம் நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்தால் அதற்கேற்ப நிறுவனப் பொருள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாகப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். மேலும், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 

இந்த நிலையில், இந்த யூடியூப் சேனலைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கடந்த 19 ஆம் தேதி இந்த நிறுவனத்திற்கு எதிராக பா.ம.க நிர்வாகி ஒருவர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று (28-01-24) இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களையும், கோவை புறவழிச் சாலையில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கூடுமாறு உரிமையாளர் சக்தி ஆனந்தன் குறுஞ்செய்தி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதன் பேரில், இன்று (29-01-24) அந்த பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு குவிந்தனர். அப்போது அவர்கள், இந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறினர். மேலும் அவர்கள், இந்த நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாகவும், இதன் மூலம் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனையடுத்து, நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் அந்த பகுதிக்கு வந்து, நிறுவனத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுப்பினர்களிடம் உறுதி அளித்தார். அந்த உறுதியின் அடிப்படையில், அங்கிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.