
கும்பகோணத்தைத் தமிழகத்தின் 39 ஆவது மாவட்டமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என வணிகர்கள் சுயமாக முன்வந்து ஊரடங்கு, கடையடைப்பு, போராட்டங்களை நடத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.
கும்பகோணத்தைத் தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது. பொது மக்களும், வணிகர்களும், அரசியல் கட்சியினரும் தனிமாவட்டம் கோரி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி அரசுக்குத் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அந்தக் கோரிக்கைகள் தற்போது வலுப்பெற்றுள்ளன. பல கட்டப் போராட்டங்களை நடத்திட முடிவு செய்து கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமும் நாச்சியார்கோவில் மற்றும் திருப்பனந்தாள் ஆகிய ஒன்றியங்களை தனி வருவாய் வட்டங்களாக அறிவிக்கக் கோரி கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடந்துவருகிறது.

இதனையடுத்து புதிய மாவட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அதற்கு அடுத்தகட்ட போராட்டமாக 17ஆம் தேதி சுய முழுஊரடங்கு வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் கும்பகோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர், நாச்சியார் கோவில், ஆடுதுறை, திருப்பனந்தாள் பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் முழவதும் சுய முழுஊரடங்கு நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
இதுபோல் கும்பகோணம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தனி மாவட்ட விவகாரம் கும்பகோணம் கோட்டத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.