People demand quality bridge construction

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சேசலூரில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை, திங்கட்கிழமை (29.11.2021) பெரியாற்றில் இறங்கி முழங்கால் அளவு தண்ணீரில் உறவினர்கள் எடுத்துச் சென்றனர். மேம்பாலம் மற்றும் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமரவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் சேசலூர். இங்கிருந்து பாலப்பட்டி வழியாக வடக்கு அம்மாப்பட்டி, தேக்கமலை கோயில் ஆகியவற்றுக்கு பெரியாறு வாய்க்கால் வழியைத்தான் பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர். வாய்க்கால் பகுதிக்கு முன்னதாகவே நின்றுவிட்ட தார் சாலைக்குப் பின் ஒற்றையடி பாதையாக கால்வாய்க்குச் சென்று, பின் கால்வாய் கடந்து சேறும் சகதியுமான கற்கள் நிறைந்த கரட்டு மேட்டில் ஏறிச் செல்ல வேண்டும்.

நடை பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவசர தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களைக் கூட பயன்படுத்த முடியாத நிலை என அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக திங்கட்கிழமை உயிரிழந்த பழனிச்சாமி மனைவி வெள்ளையம்மாளுக்கு, இறுதிச் சடங்குகள் செய்யவந்த உறவினர்களும், ஊர் மக்களும் வாய்க்காலில் முழங்கால் அளவு தண்ணீரில் தட்டுத்தடுமாறியே கடந்து சென்றனர். அதனைத்தொடர்ந்து, மயானத்திற்குச் செல்ல வெள்ளையம்மாளின் உடலை உறவினர்கள் வாய்க்காலில் முழங்கால் அளவு தண்ணீரிலே கடந்து சென்று, பின் ஒற்றையடி பாதையில் பயணித்து மயானத்திற்குச் சென்றனர்.

Advertisment

இதுகுறித்து அரசியல் பிரமுகர்களிடமும், ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் பலமுறை மனு அளித்தும் யாரும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், இப்பகுதியில் முழுமையான சாலையும், வாய்க்கால் பகுதிக்கு மேம்பாலமும் அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.