People condemn for turning a one way road!

Advertisment

ஈரோட்டில் உள்ள மேட்டூர் சாலை, சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறை, கே.என்.வி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் மட்டும் மேட்டூர் ரோடு வழியாகஅனுமதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் சத்தி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஈரோடு நாசியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

நாச்சியப்பா வீதி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால் அந்த வீதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இந்த பகுதி ஈரோடு நகரின் மையப் பகுதியாக இருக்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து பிரப் ரோடு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நாச்சியப்பா வீதிப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் கடைகள் உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சின்ன மார்க்கெட் உள்ளதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது போக்குவரத்து நெரிசலால் காய்கறிகள் வாங்கி செல்லும் பெண்கள் ஏதாவது வாகணம் மோதி விடுமா என்ற பயத்துடன் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நாச்சியப்பா நான்கு ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வந்தனர். எனினும் போக்குவரத்துநெரிசல் குறைந்தபாடில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Advertisment

இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கோட்டை பகுதி பொது மக்கள் நலச் சங்கம் சார்பில் எஸ்.பி. தங்கதுரையிடம் நாச்சியப்பா வீதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் சரி செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. எனினும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால் இதை கண்டித்து 16ஆம் தேதி ஈரோடு நாசியப்பா பகுதியில் உள்ள பல நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இனியாவது மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.