
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள சரடமங்கலம், சாதுர் பாகம், மால்வாய் ஆகிய மூன்று கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் தங்கள் நிலத்தை சிலர் மோசடி செய்து அபகரித்து விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில், "எங்களுக்கு சொந்தமான விவசாயம் செய்யாத நிலங்களை ஆடு மேய்ப்பதற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு கடந்த 2003 – 2008 ஆகிய காலகட்டங்களில் புரோக்கர் மூலமாக சில பெரு முதலாளிகள் எங்களிடம் ஏக்கருக்கு 4000 முதல் 5000 வரை பணம் தருவதாகவும் அதற்கு பதிலாக எங்களுடைய தரிசு நிலங்களை மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பவர் எழுதி தருமாறு எங்களிடம் கையொப்பம் பெற்றனர். இந்நிலையில் தற்போது இணைய வசதி வந்த பிறகு வில்லங்கம் சான்று பார்த்த போது தான் எங்களுடைய தரிசு நிலம் மட்டுமல்லாது எங்களுடைய விவசாய நிலத்தையும் எங்களை ஏமாற்றி அவர்கள் பெயரில் கிரையம் செய்து கொண்டதும், மேலும் சில நிலங்களை வங்கியில் அடமானம் வைத்ததும் தெரியவந்தது.
இந்த மூன்று கிராமங்களில் உள்ள 500 முதல் 600 ஏக்கர் நிலங்களை கிராம நிர்வாக அதிகாரிகள், சார்பதிவாளர்கள், புரோக்கர்கள் லட்சத்தை கொடுத்து நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை விற்பதாக பவர் பத்திரத்தில் கையொப்பம் செய்திருந்தால் அதற்கு மேற்பட்ட நிலங்கள் எங்களிடமிருந்து அபகரித்து விட்டனர். இதனால் எங்களுடைய இந்த நிலங்களை எங்கள் வாரிசுகளுக்கு எழுதி வைக்கவும் மற்றவர்களுக்கு விற்பனை செய்யவும் மற்றும் வங்கியில் கடன் பெறவோ இயலவில்லை. ஏனென்றால் வில்லங்கத்தில் அவர்கள் பெயர் உள்ளது. அதேபோல் பத்திரம் மற்றும் கணினி சிட்டா மட்டும் எங்கள் பேரில் உள்ளது. எனவே எங்கள் நிலங்களை மோசடி செய்து ஏமாற்றி அபகரித்த நிலங்களை சம்பந்தப்பட்ட உரிய நபர்களிடமிருந்து ஒப்படைத்தும் பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கும் வில்லங்கத்தில் உள்ள பெயர்களை நீக்கி உரிய நடவடிக்கை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.